/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பறிமுதல் வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
/
பறிமுதல் வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
ADDED : ஜூலை 20, 2025 05:05 AM

போடி: போடி சப் டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் விதி மீறலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், புதிதாக பறிமுதல் செய்யும் வாகனங்களை நிறுத்த இடம் இன்றி போலீசார் சிரமம் அடைவதுடன், ஏலம் விட வலியுறுத்தி உள்ளனர்.
போடி சப் டிவிஷனில் டூவீலர் மூலம் ஆற்று மணல், ஓடை மண் கடத்தலுக்கு பயன் படுத்தி வந்த 500 க்கும் மேற்பட்ட டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது போல கஞ்சா, மது, திருட்டு, விபத்து, போதையில் ஓட்டி வந்த வழக்கில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கார், டிராக்டர்களை அந்தந்த ஸ்டேஷன் வளாகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பல ஆண்டுகளுக்கு மேலாகியும் உரியவர்களிடம் ஒப்படைக்காமலும், ஏலம் விடாததாலும் பயன்பாடு இன்றி காட்சிப் பொருட்களாகவே உள்ளது. குப்பை, தென்னை மட்டை, மர பட்டைகள் சூழ்ந்தும், மழை வெயிலால் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் தஞ்சம் அடைந்து வருகின்றன.
பறிமுதல் செய்த சில வாகனங்களில் பெட்ரோல் இருக்கும் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
எதிர்பாராத விதமாக, தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடவும், வளாக பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.