/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உடைய குளத்தில் மண்மேவியதால் தண்ணீர் தேங்காத அவலம்; சின்னமனுார் விவசாயிகள் புலம்பல்
/
உடைய குளத்தில் மண்மேவியதால் தண்ணீர் தேங்காத அவலம்; சின்னமனுார் விவசாயிகள் புலம்பல்
உடைய குளத்தில் மண்மேவியதால் தண்ணீர் தேங்காத அவலம்; சின்னமனுார் விவசாயிகள் புலம்பல்
உடைய குளத்தில் மண்மேவியதால் தண்ணீர் தேங்காத அவலம்; சின்னமனுார் விவசாயிகள் புலம்பல்
ADDED : நவ 13, 2024 11:50 PM

சின்னமனூர்; சின்னமனூரில் நெல் சாகுபடிக்கு பாசன வசதியளிக்கும் உடைய குளம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால், மண் மேவி மேடாகி தண்ணீர் தேக்க முடியாத அவலம் நீடிக்கிறது. செப்பேடுகள் கண்ட சின்னமனூரில் 1800 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு இங்குள்ள உடையகுளம், செங்குளம் பாசன வசதியளிக்கிறது. 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட உடையகுளத்திற்கு பெரிய வாய்க்கால் மூலமும், சின்ன வாய்க்கால் மூலம் செங்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. உடையகுளத்தில் முழு கொள்ளளவை எட்டியதும் உபரிநீர் செங்குளத்திற்கு செல்லும், உடையகுளமும், செங்குளமும் தொடர்ச்சியாக உள்ளது. இரு குளங்களும் சேர்ந்து 150 ஏக்கர் உள்ளது.
உடையகுளம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை. கடந்தாண்டு கண்மாய்களில் கரம்பை மண் அள்ள அரசு அனுமதியளித்த போது கூட, உடையகுளத்தில் எடுக்க அனுமதிக்கவில்லை. இதன் விளைவு குளத்தில் மண்மேவி மேடாகியுள்ளது. இதில் செடி கொடிகள் வளர்ந்து முட்புதராக மாறியுள்ளது. கரைகள் பலமிழந்துள்ளது. தண்ணீர் முழு கொள்ளளவை எட்டும் போது கரைகள் உடையும் அபாயத்தில் உள்ளது. கண்மாயில் உள்ள 3 மடைகளும் பழுதடைந்துள்ளது. இதனால் கண்மாய் இருந்தும் பயனற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கி நிதி உதவியில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் பெயரளவிற்கு அரைகுறையாக நடந்தது. விவசாயிகளும், விவசாய சங்கங்களும் பலமுறை கோரிக்கை வைத்தும் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. விவசாயிகள் கருத்து:
கரை உடையும் அபாயம்
போஸ், முன்னோடி விவசாயி, சின்னமனூர் : உடையகுளம் தூர்வாரப்படாததால் தண்ணீர் முழு அளவில் நிரப்ப முடியவில்லை. நடுமடையை கடந்து தண்ணீர் செல்ல முடியாத அவலம். பருவமழை காலங்களில் கூட முழு அளவில் நிரம்ப வாய்ப்பில்லை. இதனால் மழை வெள்ள நீரால் கரை உடையும் அபாயம் உள்ளது. எப்போது கண்மாய் தூர் வாரியது என்பது விவசாயிகளுக்கு தெரியவில்லை, முல்லைப்பெரியாறு அணை கட்டுவதற்கு முன்பே சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் மூலம் சுருளியாற்று தண்ணீரை இந்த கண்மாய்களில் நிரப்பி விவசாயம் நடைபெற்றுள்ளது. எனவே உடையகுளம் கண்மாய் தூர் வாரவும், கரைகளை பலப்படுத்தி, மடைகளை பராமரிப்பு செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்மேவியதால் தண்ணீர் தேக்க முடியவில்லை
பாண்டி , சமூக ஆர்வலர், சின்னமனூர் :
சின்னமனூர், பூலாந்தபுரம் நெல் விவசாயத்திற்கு பாசனத்திற்கு இரு குளங்களையும் தூர் வார வேண்டும். உடைய குளம், செடி கொடிகள், மரங்கள் வளர்ந்து உருமாறி வருகிறது.
மண் மேவி வருவதால், தண்ணீர் தேக்க முடியாத சூழல் உள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையில் கூட கண்மாயில் தண்ணீர் இல்லை.
சின்ன வாய்க்கால் சாக்கடையாக மாறி கண்மாயில் கலந்து மாசுபடுகிறது.
சாக்கடை கழிவு நீர் கலக்காமல் தடுக்க வேண்டும், சின்னமனூர் நகரின் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க உதவும் உடைய குளத்தை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.