ஐ.டி.ஐ., மாணவர்கள் சுமை துாக்கும் பணியில் ஈடுபடுத்திய நிர்வாகம்
ஐ.டி.ஐ., மாணவர்கள் சுமை துாக்கும் பணியில் ஈடுபடுத்திய நிர்வாகம்
ADDED : நவ 04, 2026 02:05 PM

தேனி: தேனி எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இருந்த பழைய மேஜை, பீரோ உள்ளிட்ட பொருட்களை ஐ.டி.ஐ., மாணவர்கள் மூலம் இடமாற்றம் செய்தனர்.
தேனி மதுரை ரோட்டில் உள்ள பழைய ஐ.டி.ஐ., கட்டடத்தில் முன்பு எஸ்.பி., அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டது. பின்னர் புதிய அலுவலகம் கட்டி முடித்து எஸ்.பி., அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் ஐ.டி.ஐ., கட்டடத்தை அத்துறையிடம் ஒப்படைக்காமல் போலீஸ் நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
தற்போது மாவட்ட குற்றப்பிரிவு, சுற்றுலா துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட அலுவலங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இக்கட்டடத்தில் ஐ.டி.ஐ.க்கு சொந்தமான மேஜை, டேபிள், பீரோ ஆகியவை இருந்தன. தற்போது இவற்றை புதிய ஐ.டி.ஐ., கட்டடத்திற்கு மாற்றம் செய்ய நிர்வாகம் விரும்பியது. இதனை தொடர்ந்து இப் பொருட்களை எடுத்து செல்லும் பணிக்கு தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல் மாணவர்களை ஈடுபடுத்தினர். அதிக எடையிலான இரும்பு பொருட்கள், மரப்பலககைள் லாரிகளில் ஏற்றும் பணியில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஈடுபடுத்தினர். மாணவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
