/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மல்லிகை கிலோ ரூ.3500 வாழை இலை கட்டு ரூ.2000
/
மல்லிகை கிலோ ரூ.3500 வாழை இலை கட்டு ரூ.2000
ADDED : ஜன 25, 2024 05:59 AM
ஆண்டிபட்டி: வரத்து குறைவு தேவை அதிகரிப்பால் ஆண்டிபட்டியில் மல்லிகை பூக்கள் விலை கிலோ ரூ.3500, வாழை இலலை கட்டு ரூ.2000 வரை உயர்ந்தது.
ஆண்டிபட்டி பகுதியில் டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, திம்மரச நாயக்கனூர், ஏத்தக்கோயில் உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூக்கள் சாகுபடி உள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது: முகூர்த்த நாள், தைப்பூசத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.3500 வரை விற்பனை செய்யப்பட்டது.
பிச்சி, முல்லை கிலோ ரூ.1300, சம்பங்கி, அரளி கிலோ ரூ.300 முதல் 350, செவ்வந்தி, பன்னீர் ரோஜா ரூ.200, கோழிக்கொண்டை பூ கிலோ ரூ.80, துளசி கிலோ ரூ.50 ஆகவும் விலை உள்ளது. பனியின் தாக்கம் குறைந்தால் மல்லிகை பூக்கள் விளைச்சல் உயர்ந்து விலை குறையும் என்றனர்.
வாழை இலை: வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, ஸ்ரீரங்கபுரம், அய்யணத்தேவன்பட்டி, புதூர் உட்பட பல கிராமங்களில் வாழை சாகுபடி உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதியில் வாழை சாகுபடி அதிகம் உள்ளது.
தற்போது தைப்பூசம், முகூர்த்த நாட்களால் வாழையிலை விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன் சில்லரை விலையில் 5 இலைகள் கொண்ட மடி ரூ.20 ல் இருந்து 60 வரை உயர்ந்துள்ளது. தற்போது 36 மடிகள் கொண்ட கட்டு ரூ.2000 வரை விலை உள்ளது. இவ்வாறுதெரிவித்தனர்.