/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரள வனத்துறையினரால் 133 கிளிகளுக்கு விடுதலை
/
கேரள வனத்துறையினரால் 133 கிளிகளுக்கு விடுதலை
ADDED : ஜூலை 26, 2025 08:21 AM

கம்பம் : பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு, 139 கிளிகளை கடத்தி சென்ற மூன்று பெண்களிடம், கேரள வனத்துறையின் பறக்கும் படையினர் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகே மூன்று பெண்கள் கிளிகளுடன் நிற்பதாக, மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வனத்துறை பறக்கும் படைக்குழுவினர் விசாரணையில், அந்த பெண்களிடம், 139 பச்சை கிளிகள் இருந்தது தெரிந்தது.
மேலும், அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த ஜெயா, 50, இளவஞ்சி, 45, உஷா, 41, என, தெரியவந்தது. ஒரு ஜோடி கிளியை, 2,000 ரூபாய் வீதம் விற்க வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி, இந்த வகை கிளிகள் பாதுகாக்கப்பட வேண்டிய வன உயிரினங்கள் பட்டியலில் உள்ளவை.
இவற்றை விற்பது, வேட்டையாடுவது, வீட்டில் வைத்திருப்பது குற்றம் என்றும், 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்புகள் உள்ளன எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கிளிகளில், ஆறு கிளிகள் ஏற்கனவே இறந்துவிட்டன. மற்ற 133 கிளிகளை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து, பின் இடுக்கி வனப்பகுதியில் விடுவித்தனர்.