/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்
/
பெரியகுளத்தில் சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்
பெரியகுளத்தில் சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்
பெரியகுளத்தில் சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்
ADDED : நவ 07, 2025 11:47 PM

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெரியகுளம் கைலாசபட்டி மலை அடிவாரத்தில் கோயில்காடு அமைந்துள்ளது. இப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் மாந்தோப்புகள், தென்னை மற்றும் கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது. மலைப்பகுதியில் காட்டுமாடு, காட்டுபன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இவை அவ்வப்போது விளை நிலங்களில் சென்று பயிர்களை சேதப்படுத்தும். இந்நிலையில் கைலாசநாதர் கோயிலில் பின்புறம் சில தினங்களுக்கு முன் விளை நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இதனை விவசாயிகள், பக்தர்கள் பார்த்துள்ளனர். கடந்த வாரம் 100 கிலோ எடையுடைய மானை சிறுத்தை வேட்டையாடி சாப்பிட்டு, மிச்சத்தை விளை நிலங்களில் விட்டுச் சென்றது. கோயில்காடு விவசாயிகள் தேனி வனத்துறையிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிவித்து அதனை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.
மீண்டும் அதே பகுதிக்கு வந்த சிறுத்தை, எஞ்சிய மானின் உடலை சாப்பிட்டுள்ளது. இதே பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் விளை நிலங்களில் புகுந்த சிறுத்தை, தோட்டத்தில் காவல் இருந்த நாய்களை அடித்துக் கொன்றது. அப்போது வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விட்டனர்.
சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள், தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். பெரியகுளம் ரேஞ்சர் ஆதிரை கூறுகையில், ''காலடி தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் என கண்டறிந்துள்ளோம். பெரியகுளம், தேனி வனத்துறை இணைந்து சிறுத்தையை தேடி வருகிறோம். சில தினங்களில் பிடிப்போம்,' என்றார்.

