/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செண்டு பூக்கள் விளைச்சல் குறைவு தேவை அதிகரிப்பால் விலை உயர்வு
/
செண்டு பூக்கள் விளைச்சல் குறைவு தேவை அதிகரிப்பால் விலை உயர்வு
செண்டு பூக்கள் விளைச்சல் குறைவு தேவை அதிகரிப்பால் விலை உயர்வு
செண்டு பூக்கள் விளைச்சல் குறைவு தேவை அதிகரிப்பால் விலை உயர்வு
ADDED : செப் 28, 2025 03:28 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சியால் நடப்பு பருவத்தில் செண்டு பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் செண்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
நவராத்திரி விழாவில் பூக்களுக்கான தேவை அதிகம் ஏற்படும். செண்டு பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை நவராத்திரி விழாவில் அதிகம் பயன்படுத்தப்படும். நவராத்திரி விழாவில் தேவையை கணக்கில் கொண்டு சில மாதங்களுக்கு முன்பே செண்டு பூக்கள் சாகுபடியை துவக்கி விடுவர்.
ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த வெயில் அதனைத் தொடர்ந்து வீசும் வறண்ட காற்றால் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு பருவத்தில் செண்டு பூக்கள் சாகுபடி செய்வதை விவசாயிகள் பலரும் தவிர்த்துள்ளனர். இதனால் ஆண்டிபட்டி பகுதியில் செண்டு பூக்கள் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
பூக்கள் வியாபாரி சாந்தி கூறியதாவது: நவராத்திரி விழா காலங்களில் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு செண்டு பூக்கள் வரத்து 20 டன் அளவில் இருக்கும். தற்போது வரத்து 2 டன் அளவில் மட்டுமே உள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.40 ஆக இருந்த செண்டு பூக்கள் நேற்று கிலோ ரூ.110 வரை உயர்ந்தது. வரத்து அதிகமானால் உள்ளூர் தேவைகளுடன் மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
வரத்து குறைவால் வெளியூர்களுக்கு அனுப்பப்படவில்லை. நேற்று ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்கள் கிலோ ரூ.700, முல்லை ரூ.500, ரோஸ் கிலோ ரூ.80, ஜாதிப்பூ கிலோ ரூ.300 வரை விலை இருந்தது.