/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் புதிய தாலுகா உருவாக்கப்படுமா; வருவாய் கிராமங்கள் கூடுதல் பணியிடங்களால் அரசின் சேவை எளிதாகும்
/
மாவட்டத்தில் புதிய தாலுகா உருவாக்கப்படுமா; வருவாய் கிராமங்கள் கூடுதல் பணியிடங்களால் அரசின் சேவை எளிதாகும்
மாவட்டத்தில் புதிய தாலுகா உருவாக்கப்படுமா; வருவாய் கிராமங்கள் கூடுதல் பணியிடங்களால் அரசின் சேவை எளிதாகும்
மாவட்டத்தில் புதிய தாலுகா உருவாக்கப்படுமா; வருவாய் கிராமங்கள் கூடுதல் பணியிடங்களால் அரசின் சேவை எளிதாகும்
ADDED : அக் 16, 2025 06:30 AM

தேனி: -தேனி மாவட்டத்தில் புதிய வருவாய் கிராமங்கள், தாலுகாக்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. புதிதாக உருவாக்குவதால் பணியிடங்கள் அதிகரித்து அரசு அலுவலர்களக்கு பணிச்சுமை குறைந்து, நிர்வாகப்பணிகள் எளிதாகும். அரசு திட்டங்கள் பொதுமக்களிடம் விரைவாக சென்றடையும்.
தேனி மாவட்டம் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்து 1996ல் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது. 1997 முதல் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கின. மாவட்டம் துவங்கிய போது 1991ல் இருந்த மக்கட்தொகையை அடிப்படையாக கொண்டு தாலுகாக்கள் பிரிக்கப்பட்டன. தற்போது தேனி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி ஆகிய 5 தாலுகாக்கள், 113 வருவாய் கிராமங்கள், 6 நகராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன.
மாவட்டம் உருவான போது இருந்த மக்கட்தொகையை விட தற்போது 2 மடங்கிற்கு மேல் மக்கட்தொகை அதிகரித்துள்ளது. ஆனால், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள் அதிகரிக்கவில்லை. இதனால் சான்றிதழ் வழங்குதல், கள ஆய்வு, அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் தொடர் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாக மாவட்டம் உருவான போது 500 பேருக்கு ஒரு அலுவலர் என கணக்கிடப்பட்டிருந்தால், தற்போது 1200 பேருக்கு ஒரு அலுவலர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம் தாலுகாவில் 3 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 3 ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டத்தில் மக்கட் தொகையில் சுமார் 35 சதவீதம் பேர் இந்த தாலுகாவில் வசிக்கின்றனர். அதே போல் ஆண்டிபட்டி தாலுகாவில் உட்கடை கிராமரங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அலுவலகத்தில் இருந்து சுமார் 50 கி.மீ., பயணித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளும் நிலை உள்ளது.
வருவாய்த்துறையினர் கூறுகையில், மாவட்டத்தில் பெரிய தாலுகா, வருவாய் கிராமங்கள் புதிதாக உருவாக்கினால் நிர்வாகம் செய்வது எளிதாகும். மேலும் பணியிடங்கள் அதிகரிக்கும் போது பலர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். அரசு திட்டங்கள் எளிதில் பொதுமக்களுக்கு சென்றடையும். அரசு அலுவலர்கள் பணிச்சுமை குறையும். சில ஆண்டுகளுக்கு முன் உத்தமபாளையம் தாலுகாவை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிராமங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் போலீஸ் ஸ்டேஷன்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அப்போது குற்றசம்பவங்களை தடுப்பதும் எளிதாகும், அரசின் சேவை மக்களை எளிதாக சென்றடையும் என்றனர்.