ADDED : ஜூலை 02, 2025 06:55 AM

தேனி : தேனி அல்லிநகரத்தில் கொடிமர பீடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ரோட்டோரத்தில் அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வைத்துள்ள கொடிகம்பங்கள், பீடங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேனி நகராட்சி பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை அவ்வப்போது கொடிகம்பங்கள் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜசேகர் தலைமையில் பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம் பகுதியில் கொடிகம்பங்கள் இருந்து பீடங்களை அகற்றினர்.
அல்லிநகரம் அம்பேத்கர் தெருவில் கொடிகம்ப பீடத்தை அகற்றினால், அருகில் உள்ள ஒரு உள்ள பெயர் பலகை சேதமடையும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், போலீசார் இணைந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பீடம் அகற்றப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.