/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை ஆறு மாசுபடுவதை தவிர்க்க வீடுகளில் உறிஞ்சு குழிகள் அமைப்பு 70 வீடுகளில் சொந்த செலவில் அமைத்த ஓய்வூதியர்
/
வைகை ஆறு மாசுபடுவதை தவிர்க்க வீடுகளில் உறிஞ்சு குழிகள் அமைப்பு 70 வீடுகளில் சொந்த செலவில் அமைத்த ஓய்வூதியர்
வைகை ஆறு மாசுபடுவதை தவிர்க்க வீடுகளில் உறிஞ்சு குழிகள் அமைப்பு 70 வீடுகளில் சொந்த செலவில் அமைத்த ஓய்வூதியர்
வைகை ஆறு மாசுபடுவதை தவிர்க்க வீடுகளில் உறிஞ்சு குழிகள் அமைப்பு 70 வீடுகளில் சொந்த செலவில் அமைத்த ஓய்வூதியர்
ADDED : நவ 02, 2025 02:21 AM

தேனி: வைகை ஆறு மாசுபடுவதை தவிர்க்க தேனி மாவட்டம், கோவிந்தநகரத்தை சேர்ந்த ராமசாமி 68, என்பவர் சொந்த செலவில் கிராமத்தில் உள்ள 50 வீடுகளில் செப்டிக் டேங்க் கழிவு நீரை உறிஞ்சு குழிகள் அமைத்து பூமிக்குள் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தேனி மாவட்டம், வைகை ஆற்றில் கழிவு நீர், குப்பையால் மாசுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள கோவிந்தநகரம் கிராமத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் தடுக்க இவ்வூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ராமசாமி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவு நீரை வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க பள்ளம் தோண்டி குழாய் மூலம் பூமிக்குள் விடுகிறார்.
இத்திட்டம் குறித்து அவர் கூறியதாவது: துாய்மை பாரத திட்டத்தில் உறிஞ்சு குழாய் மூலம் பூமிக்குள் கழிவு நீர் செலுத்துவதை தெரிந்து கொண்டேன். இதனை அடிப்படையாக கொண்டு செப்டிக் டேங்க்கில் இருந்து வெளியேறும் கழிவு நீரை குழாய் மூலம் இணைத்து அதன் அருகே 3.5 அடி பள்ளம் தோண்டி பூமிக்குள் செல்லும் வகையில் உறிஞ்சு குழிகள் அமைத்தேன். இதனால் கழிவு நீர் ஆற்றிற்கு செல்வது தவிர்க்கப்பட்டது. ஒரு வீட்டிற்கு உறிஞ்சு குழி அமைக்க ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் செலவு ஆகிறது.இதனை என் சொந்த செலவில் கோவிந்தநகரத்தில் 50 வீடுகள், ஊராட்சி அலுவலகத்தில் செயல்படுத்தி உள்ளேன்.
இதனை பார்த்த பலரும் தங்கள் வீடுகளில் அமைக்க துவங்கி உள்ளனர். சிலர் தற்போது மழைநீர், வீட்டு உபயோக நீரையும் விட துவங்கி உள்ளனர். விருதுநகர் மாவட்டம், வடமலாபுரம் கிராமத்திலும் 25 வீடுகளில் உறிஞ்சு குழாய் அமைத்துள்ளேன். இதற்காக இதுவரை ரூ.1.25 லட்சம் செலவிட்டுள்ளேன். இதே முறையில் சாக்கடை கழிவு நீரை ஆற்றிற்குள் செல்ல விடாமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்கிறேன். இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகத்திடமும் பேசி வருகிறேன் என்றார்.

