திருவிழாவில் தகராறு : மூவர் மீது வழக்கு
தேனி: பூமலைக்குண்டு காளியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. ஊர்வலம் துவங்க தயாரானபோது அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், பவித்ரன் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் பவித்ரன் அஜித்குமாரை செங்கல் வைத்து தலையில் தாக்கி, கத்தியால் தாக்க முயன்றார். அதில் தீபக்குமார் என்பவர் காயமடைந்தார். இந்நிலையில் பவித்ரன், நித்தீஷ் இணைந்து அஜித்குமார் தம்பி அவின்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்தவர்கள் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அஜித்குமார் புகாரில் பவித்ரன், நித்தீஷ், ரோகேஸ் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்
தேனி: பழனிசெட்டிபட்டி ராஜசேகரன், வைகை அணை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றுகிறார். இவரது மகள் தர்ஷினி 18, கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பவில்லை. மாணவியின் தாய் உமாமகேஸ்வரி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற மூவர் கைது
கடமலைக்குண்டு: கணேசபுரம் டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பதாக போலீசருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் எஸ்.ஐ., மலைச்சாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கண்டனூரைச் சேர்ந்த ரத்தினம்மாள் 70, கையில் உள்ள சிறு பையில் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தார். போலீசார் 45 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி அவரிடம் விசாரித்த போது தனது மகன் பழனிச்சாமி, மருமகள் முருகேஸ்வரி ஆகியோர் வாங்கி கொடுத்த கஞ்சா பொட்டலங்களை விற்பதாக தெரிவித்துள்ளார். கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
டூவீலர் மீது கார் மோதி மூன்று பேர் காயம்
தேவதானப்பட்டி: குள்ளப்புரம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் 47. தனது நண்பர்கள் ராஜேஸ்வரன் 44, வேண்டாமணி 47. ஆகியோருடன் டூவீலரில் ஜெயமங்கலத்திலிருந்து, குள்ளப்புரம் நோக்கி சென்றனர். டூவீலரை மணிகண்டன் ஓட்டினார். எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் மணிகண்டன் உட்பட 3 பேரும் காயமடைந்தனர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய குள்ளப்புரம் சந்திராபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் பிரபு 30. விடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தகராறு நால்வர் மீது வழக்கு
பெரியகுளம்: பெரியகுளம் கீழ வடகரை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் 53. மே 22ல் கோயில் திருவிழாவில் 'விளையாட்டு சட்டி' எடுப்பதில் முருகன், அதே பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி 50, தகராறு ஏற்பட்டது. முன் விரோதமாக வீராச்சாமி, இவரது நண்பர்கள் பால்பாண்டி, பிரேம்குமார், பாண்டி ஆகியோர், கம்பி, அரிவாளால் முருகன் அவரது மனைவி மகாலட்சுமி, மகன்கள் அன்புச் செல்வம், ஹரிஷ் ஆகியோரை தாக்கியதில் காயம் ஏற்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வீராச்சாமி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
முன் விரோத தகராறு: 50 பேர் மீது வழக்கு
போடி: போடி பங்கஜம் பிரஸ் பின் பகுதியை சேர்ந்தவர் பரமன் 55. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சேகர் 51. என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பரமன் வீட்டின் எதிரே உள்ள டீ கடை முன்பாக சேகர் என்பவர் குடித்து விட்டு தகாத வார்த்தையால் பேசி உள்ளார். பரமன் தட்டி கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த சேகர் கீழே கிடந்த கல்லை எடுத்து பரமன் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். இது போல சேகர் வீட்டில் இருந்த போது பரமன் மற்றும் 49 நபர்கள் சேர்ந்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சேகரை அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். பரமன் புகாரில் சேகர் மீதும், சேகர் புகாரில் பரமன் உட்பட 49 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.