வனப்பகுதியில் முதியவர் தற்கொலை
தேனி: தேனி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிபவர் பரமசிவம். இவரது உதவியாளர் பாண்டியன். இருவரும் தேனி சிவாஜிநகர், விஸ்வதாஸ் காலனி அருகே உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
தேனி: கோட்டைபட்டி காலணித் தெரு கூலித்தொழிலாளி ராணி. இவரது மகள் சந்தியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த முனிசெல்வத்திற்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன் தாயார் வீட்டிற்கு சந்தியா வந்தார். கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அங்கன்வாடி மையத்தில் திருட்டு
பெரியகுளம்: தென்கரை அம்பேத்கர் நகரில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு மர்ம நபர்கள் கதவை உடைத்து '32 இன்ச்' எல்.இ.டி., டி.வி., -1, ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் -2, உட்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். அங்கன்வாடி பணியாளர் நாகம்மாள் 55, புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற பெண் கைது
பெரியகுளம்: தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம் தலைமையிலான போலீசார் தாமரைக்குளம் பைபாஸ் ரோடு பிரிவு சேடபட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகம்படும்படி உசிலம்பட்டி தாலுகா கட்டத்தேவன்பட்டி வடக்கு தெரு பஞ்சவர்ணம் 60. கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் சோதனையிட்டனர். அதில் 4.300 கிலோ எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்கு உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு கொண்டு வந்தது தெரிந்தது. எஸ்.ஐ., ஜீவானந்தம், பஞ்சவர்ணத்தை கைது செய்து, கஞ்சா, கஞ்சா விற்ற 3760 ரூபாயை கைப்பற்றினார். பஞ்சவர்ணம் மீது உசிலம்பட்டி, மதுரை போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
லாரி விபத்தில் டிரைவர் பலி
மூணாறு: ராஜாக்காடு பகுதியில் இருந்து பாறைப்பொடி ஏற்றிய டாரஸ் லாரி குஞ்சுதண்ணி நோக்கி நேற்று காலை சென்றது. கம்பிளிகண்டத்தைச் சேர்ந்த டிரைவர் ஆகாஷ் 45, லாரியை ஓட்டினார். ஜோஸ்கிரி, தேக்கின்கானம் ரோட்டில் நேற்று காலை 7:00 மணிக்கு இறக்கத்தில் சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் ஓரம் மண்மேட்டில் மோதியது. இவ்விபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. அதனுள் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் ஆகாஷை, ராஜாக்காடு போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து மீட்டனர். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆகாஷ் இறந்தார். ராஜாக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு
போடி: த.வெ.க., வின் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை கொண்டாடும் வகையில் த.வெ.க., போடி நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி, இளைஞரணி செயலாளர் அருண்குமார், ராசிங்காபுரம் ஒன்றிய செயலாளர் மதன்குமார் தலைமையில் போடி போஜன் பார்க் அருகே உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பட்டாசு வெடித்ததாக ஆண்டிச்சாமி, அருண்குமார், மதன்குமார் மீது போடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.