டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
ஆண்டிபட்டி:ராஜதானி எஸ்.ஐ.முஹம்மது யஹ்யா மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது கன்னியப்பபிள்ளைபட்டி அரசு ஆரம்பப்பள்ளி அருகே சென்ற டிராக்டரை சோதனை செய்தனர். அதில் ஒரு யூனிட் ஓடை மணல் இருந்துள்ளது. மணல் கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டு இல்லை. இதனைத் தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிராக்டரை ஓட்டிச் சென்ற டி. சுப்புலாபுரத்தைச் சேர்ந்த டிரைவர் பிரவீன் குமார் என்பவரை கைது செய்தனர்.
டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி
போடி: சிலமலை டி.எஸ்.பி., காலனியை சேர்ந்தவர் காளிகுமார் 34. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் சிலமலை - தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார். (ஹெல்மெட் அணிய வில்லை) ரோட்டை கடக்க முயன்ற போது அதிமேகமாக வந்த தனியார் பஸ் டூவீலர் மீது மோதியதில் காளிகுமார் பலத்த காயம் அடைந்தார். போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது காளிகுமார் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
காளிகுமார் தாயார் மின்னல் புகாரில், சிலமலை வ.உ.சி., நகரைச் சேர்ந்த பஸ் டிரைவர் மூவேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கிணற்றில் ஆண் உடல் மீட்பு
பெரியகுளம்: டி.கள்ளிப்பட்டி வாய்க்கால் பாதை செல்லும் ரோட்டில், கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தண்ணீரில் மிதந்தது. தென்கரை பிட்1 வி.ஏ.ஓ., வித்யா புகாரில், தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மது பதுக்கியவர் கைது
தேனி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கண்டமனுார் அருகே குப்பிநாயக்கன்பட்டி லிங்கம்மாள் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது குப்பிநாயக்கன்பட்டி கிழக்குத்தெரு மாயாண்டி 44, அரசு அனுமதி இன்றி ரூ.4050மதிப்புள்ள 37 மதுபாட்டில்களை விற்பதற்காக பதுக்கியிருந்தார். அவரை கைது செய்த போலீசார்,மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்பனை: இருவர் கைது
ஆண்டிபட்டி: கண்டமனூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கண்டமனூர் போலீசார் ரோந்து சென்றனர். புதுராமச்சந்திராபுரம் பெட்டிக்கடையில் ரூ.3600 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் ராஜேஸ்வரி 75, என்பவரை கைது செய்தனர்.
தேவதானப்பட்டி: சில்வார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் 51. இவரது பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தார். தேவதானப்பட்டி போலீசார் ராமலிங்கத்தை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.