மனைவி மாயம்
ஆண்டிபட்டி: உசிலம்பட்டி அருகே சீமானுாத்தை சேர்ந்தவர் முத்து 30. மைக்செட் அமைக்கும் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி 29. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முத்து தனது குடும்பத்துடன் ஆண்டிபட்டி அருகே ராயவேலுாரில் உள்ள அவரது அக்கா மொக்கம்மாள் வீட்டிற்கு, பொங்கல் விழாவிற்கு சென்றிருந்தார். விழா முடிந்தபின் மே 29ல் பரமேஸ்வரி தனது ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் ஊருக்கு செல்லவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும் பல இடங்களில் தேடியும் அவர் குறித்து விவரம் கிடைக்கவில்லை. கணவர் புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி ஒருவர் பலி
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி ஸ்ரீராம் நகர் பெருமாள் 63. இவரது உறவினர் ரமேஷ் வீட்டு விசேஷத்திற்கு பொருட்களை வாங்கிக் கொண்டு பெருமாள் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். டூவீலரில் செயின் அறுந்தது. இதனால் டூவீலரை உருட்டிக்கொண்டு காட்ரோடு பிரிவு அருகே ரோட்டின் இடதுபுறம் நின்றிருந்தார். அந்த வழியாக வேகமாக வந்த டூவீலர் பெருமாள் மீது மோதியது. உறவினர்கள் வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு பெருமாள் உடலை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை யாகியாசுலைமானிடம் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு
தேனி: பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெரு மனோகரன் 56. இவரது தோட்டம் வெங்கடாசலபுரத்தில் உள்ளது. மழை காலத்தில் தோட்டத்தில் கழிவு நீர் வராமல் தடுக்க தடுப்பு வலை அமைத்திருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன், ராமமூர்த்தி, கணபதி, ஜோதி, வெங்கடேசன், சீனிவாசன், கோபிகிருஷ்ணன், சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். மனோகரன் புகாரில் 8 பேர் மீது வழக்கு பதிந்து வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் இருவர் காயம்
தேனி: கோடாங்கிபட்டி ஜெயபிரகாஷ் 47. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது நண்பர் பழனிசெட்டிபட்டி ரமேஷ் 52. இருவரும் டூவீலரில் கம்பம் ரோட்டில் சென்றனர். பழனிசெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தனர். அப்போது வீரபாண்டி ஹைஸ்கூல் தெரு சிவனேஷ்குமார் 21, ஓட்டி வந்த டூவீலர் ஜெயபிரகாஷ் டூவீலரில் மோதியது.
இந்த விபத்தில் ஜெயபிரகாஷ், ரமேஷ் காயமடைந்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.