டூவீலர் திருட்டு
தேனி: உத்தமபாளையம் சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோயில் தெரு சின்ன ஆண்டவர் 40. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உறவினரை பார்க்க ஆக.2ல் டூவீலரில் சென்றார். ஒருங்கிணைந்த 'சீமாங்' சிகிச்சை மையத்திற்கு கீழ் உள்ள டூவீலர் பகுதியில் டூவீலரை நிறுத்திவிட்டு, உறவினரை பார்க்கச் சென்றார். திரும்பி வந்த போது டூவீலரை காணவில்லை. க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி தற்கொலை
ஆண்டிபட்டி: குமணன்தொழு கண்ணுச்சாமி தெரு விவசாயி தேவர் 65. இவர் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். ஓராண்டுக்கு முன் இடது கால் விரலில் புண் ஏற்பட்டு விரலை அகற்றினர். பின் அதே காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விரலை எடுத்து விடுவார்களோ என விரக்தியிலும், பாத எரிச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளார். ஆக.12ல் தளிப்பாறையில் உள்ள தோட்டத்தில் உள்ள குடிசையில் விஷம் குடித்து மயங்கினார். பின் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
12 கிலோ புகையிலை பதுக்கியவர் கைது
தேனி: வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் தலைமையிலான போலீசார் தர்மாபுரி மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது தர்மாபுரி மேற்குத் தெரு ராமகிருஷ்ணனின் 66, பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட ரூ.6432 மதிப்புள்ள 12 கிலோ எடையுள்ள 804 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவரை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வியாபாரி கைது
தேனி: மதுவிலக்கு சிறப்பு எஸ்.ஐ., சந்திரபாண்டியன் தலைமையிலான போலீசார் பெரியகுளம் -முருகமலை ரோட்டில் உள்ள குப்பை கிடங்கு அருகேரோந்து சென்றனர். அப்போது பெரியகுளம் நேரு நகர் ஜே.கே.,காலனி அழகர் 39, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்தார்.அவரை சோதனையிட்டத்தில் ஒரு கிலோ 724 கிராம் கஞ்சாவுடன் இருந்தார். அவர், பெரியகுளத்தை சேர்ந்த சில்லரை கஞ்சா வியாபாரி மாதவனிடம் இருந்து கஞ்சாவைவாங்கி, விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதனால் அழகரை கைது செய்து மாதவனை தேடி வருகிறார். கைதான அழகர் மீது தேனி போதைப் பொருட்கள் தடுப்பு சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசில் 6 வழக்குகள்,பெரியகுளம் போலீசில் 15, தென்கரையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு கொலை முயற்சி வழக்கும் அடங்கும்.