ADDED : செப் 08, 2025 06:01 AM
தாயாரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு
தேனி: கோட்டூர் காமராஜர் காலனி பெருமாள், பொண்ணுத்தாய் 60. இவர்களது மகன் தினேஷ்குமார் 42. இவரை படிக்க வைக்க பெற்றோர் பலரிடம் கடன் வாங்கினர். கடனை செலுத்த நிலத்தை விற்றனர். இதனால் கோபமடைந்த தினேஷ்குமார், அவரது மனைவி கனிமொழி 36, இணைந்து பொண்ணுத்தாயை கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்தவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
துக்க வீட்டிற்கு டூவீலரில் சென்றவர் விபத்தில் பலி
பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேலக்காமக்காபட்டி நடராஜன் 70. பெரியகுளம் பகுதியில் உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்றார். அங்கிருந்து டூவீலரில் வீடு திரும்பும்போது, பெரியகுளம் தேனி பைபாஸ் ரோடு டி.கள்ளிப்பட்டி அருகே பின்னால் வந்த கார் மோதி, விபத்து நடந்தது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய கேரள மாநிலம் இடுக்கி பழத்தோட்டம் ஹவுஸைச் சேர்ந்த சிபி ஆப்ரஹாமிடம், தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மர்மமாக இறந்த தோட்டக்காவலாளி
கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டியில் தென்னந்தோப்பில் தோட்டக் காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மின்சாரம் தாக்கி இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கூடலுார் அருகே கருநாக்கமுத்தன்பட்டி கர்ணன் 64. அங்குள்ள அய்யரின் தென்னந்தோப்பில் காவலாளியாக இருந்தார். நேற்று பகல் தென்னந்தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மின்சாரம் தாக்கி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என கூடலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.