ADDED : அக் 13, 2025 04:27 AM
பழைய இரும்பு கடையில் திருட்டு
தேனி: மிராண்டா லைன் தங்ககணேஷ் 39. இவர் சுப்பன்செட்டி தெருவில் சடையால் கோயில் அருகே பழைய இரும்பு பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். கடையை அக்.10 இரவு பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் அக்.11 காலை கடைக்கு சென்ற போது கடையின் அலுவலக அறை உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள காப்பர், பித்தளை, கன்மெட்டல், கண்காணிப்பு கேமராக்கள், கட்டிங் மெஷின்கள் திருடு போயிருந்தன. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
விரக்தயில் தற்கொலை
போடி: மல்லையன் தெரு செந்தில்குமார் 44. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நேற்று சாலைக் காளியம்மன் கோயில் மேற்கு பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த இவரது மகன் ஹரிஹரன் 19, உறவினர்களும் செந்தில்குமாரை போடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக டாக்டர் கூறினர். மகன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவலர் விபத்தில் ஒருவர் காயம்
தேனி: கோவிந்தநகரம் வடக்குத் தெரு கூலித்தொழிலாளி மாரிச்சாமி 52. சொந்த வேலையாக அல்லிநகரம் வந்தவர், நடந்து தேனி புது பஸ் ஸ்டாண்ட் சென்றார். சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் ரோடு சந்திப்பு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத டூவீலர் மாரிச்சாமி மீது மோதி விபத்து நடந்தது. காயமடைந்தவர் பஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சென்று, சிகிச்சையில் சேர்ந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
தேனி: பெரியகுளம் வடகரை பட்டாப்புளி பேட்டைத் தெரு கூலித்தொழிலாளி ராமையா 55. இவரது டூவீலரை அக்.9ல் வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்த போது டூவீலரை காணவில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராமையா புகாரில் பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மகள் மாயம் : தந்தை புகார்
போடி: சில்லமரத்துப்பட்டி 3வது குறுக்கு தெரு ராஜேஷ் கண்ணன் 52. இவரது மகள் ஜெமிமா 22. இவர் தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியர். இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றவர், திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. போடி தாலுகா போலீசார் காணாமல் போன ஜெமிமாவை தேடி வருகின்றனர்.