/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணை புதிய கண்காணிப்பு குழுவில் கேரள அதிகாரிகளை நீக்க முற்றுகை போராட்டம் - குமுளி லோயர்கேம்பில் விவசாய சங்கம் சார்பில் நடந்தது
/
பெரியாறு அணை புதிய கண்காணிப்பு குழுவில் கேரள அதிகாரிகளை நீக்க முற்றுகை போராட்டம் - குமுளி லோயர்கேம்பில் விவசாய சங்கம் சார்பில் நடந்தது
பெரியாறு அணை புதிய கண்காணிப்பு குழுவில் கேரள அதிகாரிகளை நீக்க முற்றுகை போராட்டம் - குமுளி லோயர்கேம்பில் விவசாய சங்கம் சார்பில் நடந்தது
பெரியாறு அணை புதிய கண்காணிப்பு குழுவில் கேரள அதிகாரிகளை நீக்க முற்றுகை போராட்டம் - குமுளி லோயர்கேம்பில் விவசாய சங்கம் சார்பில் நடந்தது
ADDED : ஜன 26, 2025 07:37 AM

கூடலுார் : முல்லைப் பெரியாறுஅணை புதிய கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 2 கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் மாநில எல்லைப் பகுதியான குமுளி லோயர்கேம்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி உள்ளது. ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டத்தை கேரளா 1979ல் பலவீனமடைந்துவிட்டது எனக்கூறி 136 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மற்றும் விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2014ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக்கி கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்குப் பின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதை தடுக்க கேரளாவில் பல்வேறு தொடர் போராட்டங்கள் அரங்கேறி வருகிறது.
கேரளாவின் இச்செயலை கண்டித்து தமிழக விவசாயிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கலைப்பு
2022ல் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜோசப் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதத்திற்குள் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்தது. 2024 அக்., 1 முதல் முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டது.
புதிய கண்காணிப்பு குழு
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் மற்றும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் என 7 பேர் உள்ளனர்.
முற்றுகை
இதில் கேரள அரசு சார்பில் இடம்பெற்றுள்ள 2 அதிகாரிகளை நீக்க வலியுறுத்தி நேற்று பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன்காட்சிக் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், கவுரவத் தலைவர் சலேத்து தலைமையில் லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்டில் இருந்து குமுளி நோக்கி முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
மலைப்பாதையில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே டி.எஸ்.பி., செங்கோட்டுவேலவன், இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரம் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.