/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் கோரி மறியல்: போக்குவரத்து பாதிப்பு
/
குடிநீர் கோரி மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 24, 2025 03:49 AM
தேவாரம்: தேவாரம் அருகே டி.மேட்டுப்பட்டியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் குடிநீரை வினியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உத்தமபாளையம் ஒன்றியம், டி.மீனாட்சிபுரத்திற்கு உட்பட்டது டி.மேட்டுப்பட்டி. இப்பகுதியில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீருக்கான பைப்லைன் அமைக்கப்பட்டு தேவாரத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வரும் வழியில் உள்ள ஏர் பைப் லைன் மூலம் டி.மேட்டுப்பட்டியை சேர்ந்த மக்கள் ஓராண்டாக குடிநீர் பிடித்து பருகி வந்தனர்.
குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏர் பைப் லைனை அடைத்து உள்ளனர். இதனால் முல்லைப் பெரியாறு அணை குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். இதனால் ஊராட்சி போர்வெல் நீரையே குடிநீராக பருகு கின்றனர். அதிலும் போதிய நீர் கிடைக்காததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.
இதனை ஒட்டி முல்லைப் பெரியாறு அணை மூலம் வரும் குடிநீரை டி.மேட்டுப்பட்டிக்கு வினியோகம் செய்யவும், புதிதாக பைப் லைன் அமைக்க கோரி பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் தேவாரம் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து போடி டி.எஸ்.பி., சுனில், தேவாரம் இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் ஜோதி, உத்தமபாளையம் பி.டி.ஓ., ஜெயப்பிரகாசம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
15 நாட்களுக்குள் பைப் லைன் அமைத்து முல்லைப் பெரியாறு அணை குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.