/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
/
பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஏப் 05, 2025 05:37 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் நீண்ட நாட்களுக்கு பின் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 395 கன அடியாக அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பத்தால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்தது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 34.8 மி.மீ., தேக்கடியில் 4.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 105 கன அடியாக இருந்த நீர்வரத்து 395 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டமும் சற்று உயர்ந்து 113.15 அடியானது. (மொத்த உயரம் 152 அடி).
தமிழக பகுதிக்கு குடிநீருக்காக வினாடிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக தமிழக பகுதிக்கு வெளியேறுகிறது.
நீர் இருப்பு 1417 மில்லியன் கன அடியாகும். இரண்டு நாட்கள் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நீர்ப்பிடிப்பில் மேலும் மழை அதிகரித்து நீர்மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.