PUBLISHED ON : அக் 20, 2025 12:00 AM
தேவதானப்பட்டி: தினமலர் நாளிதழின் செய்தி எதிரொலியாக பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை போலீசார் அகற்றி, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பெரியகுளம் - வத்தலக்குண்டு ரோடு, காட்ரோடு பஸ் ஸ்டாப் முன்புறம் லாரிகள், கார்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் பெரியகுளம், தேனி, கம்பம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் ஸ்டாப்பில் நிற்க முடியாமல் சிரமப்பட்டனர்.
ரோட்டில் மழை, வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் 'ஆக்கிரமிப்பு அட்டகாசம்' பகுதியில் படம், படவிளக்கம் வெளியானது. இதன் எதிரொலியாக போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ், தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன், சிறப்பு எஸ்.ஐ., பிரபாகரன், போலீசார் முருகானந்தம் ஆகியோர் ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்ற உத்தரவிட்டனர்.
வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசு, தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாப்பில் நிறுத்த வேண்டும் என அரசு, தனியார் பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.