/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 27, 2024 08:41 AM

தேனி : வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.
மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை வழங்கிட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி நெருக்கடி அளிப்பதை தவிர்த்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டம் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் நடந்தது.
இதனால் வழக்கமான அலுவல் பணிகள், பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிப்படைந்தன. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுரேந்தர், ஆண்டிப்பட்டியில் மாவட்ட செயலாளர் கண்ணன், உத்தமபாளையத்தில் மாவட்ட தலைவர் ராமலிங்கம், போடியில் செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், பெரியகுளத்தில் மாவட்ட இணைச்செயலாளர் ஒச்சாத்தேவன் தலைமை வகித்தனர்.
ஆண்டிபட்டி: தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சங்கர் உட்பட தாலுகா அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வழக்கமான பணிகள் பாதித்தது.பல கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.