தேனியில் டிச., 1 முதல் சுய உதவிகுழுவினர் மூலம் துாய்மை பணி
தேனியில் டிச., 1 முதல் சுய உதவிகுழுவினர் மூலம் துாய்மை பணி
UPDATED : நவ 20, 2026 08:03 PM
ADDED : நவ 20, 2026 08:01 PM
தேனி: தேனி நகராட்சியில் டிச., 1 முதல் சுயஉதவி குழுவினர் மூலம் துாய்மை பணி மேற்கொள்ள உள்ளதாகவும், முதற்கட்டமாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி பகுதிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. ஆனால், சரிவர பணிகள் நடைபெறவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நகராட்சிகளில் சுய உதவிக்குழுவினர் மூலம் துாய்மை பணிகள் மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நகர்பகுதிகளில் சுயஉதவி குழுவினரை மகளிர் திட்டம் மூலம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
நகராட்சி அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், ‘தேனி நகராட்சியில் 33 வார்டுகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிச., 1 முதல் சுய உதவி குழுவினர் மூலம் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக மகளிர் திட்டம் மூலம் இதுவரை சுமார் 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 பேர் துாய்மை பணியில்ஈடுபடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சியில் சம்பளம் இருந்து மகளிர் திட்டத்திற்கு செலுத்தப்படும். அவர்கள் குழுவினருக்கு வழங்குவார்கள்,’ என்றனர்.
