/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வில் பள்ளி மாணவிகள்
/
பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வில் பள்ளி மாணவிகள்
ADDED : ஜன 29, 2024 06:24 AM

'மரங்களை வெட்டி அழிப்பதால் தண்ணீர், தூய காற்றும் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்.
மேலும் மாடி தோட்டம், வீட்டில் செடிகள் வளர்த்து நீரை சேமிப்பதன் மூலம் மாசற்ற, மகிழ்ச்சியான வாழ்வை நம் சந்ததினருக்கு விட்டுச் செல்ல முடியும்.
மரங்கள் வளர்ப்பதனால் அதிகளவு ஆக்சிஜன் பெறலாம்.
இதன் மூலம் மாணவர்கள் சுகாதாரமான காற்றை சுவாசித்து படித்து, மன அமைதி பெறலாம்.' என, தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பசுமை படை மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் இப்பள்ளி வளாகம் பசுமையாக காட்சியளிக்கிறது.
வழிகாட்டும் தினமலர் நாளிதழ்
எஸ்.சுந்தரேசன், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர், ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி, போடி: பள்ளியை 'பசுமையாக்குவோம்' திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களது பிறந்த நாளில் ஒவ்வொரு மரக்கன்றுகள் நட்டு அதனை பராமரிக்க அறிவுறுத்தி உள்ளோம். பசுமைப்படை மாணவர்கள் மூலம் பள்ளியில் பாலிதீன் பயன்பாடு இல்லாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பள்ளியில் சேகரமாகும் மக்கும், மக்காத குப்பை தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை இயற்கை உரமாகவும், மக்காத குப்பை மறுசுழற்சிக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் சிந்தனை, கற்பனை திறன், நல்ல ஒழுக்கங்களை வளர்க்க முடிகிறது. மரங்கன்றுகள் வளர்ப்பது, மாடித் தோட்டம் அமைப்பது குறித்து 'தினமலர்' நாளிதழ் வழிகாட்டியாக அமைந்துள்ளது.
'மரங்கள் மழைக்கு உரங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரண்கள்' என்கிற அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் பூமியின் வெப்பத்தை குறைக்கும் வகையில் பசுமை தரும் வேம்பு, குளிர்ச்சி தரும் புங்கை, ஆக்சிஜனை வெளிப்படுத்தும் அசோகா மரம், மலைவேம்பு, நாவல், பன்னீர் மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான 400 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பசுமைப் படை மாணவர்கள் மூலம் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.', என்றார்.
விழிப்புணர்வு ஊர்வலம் :
எம்.பிரபு கண்ணன், ஆசிரியர், ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி, போடி : எங்கள் பள்ளிக்குள் நுழையும் போது அனைவரையும் வரவேற்பது மூல கணபதி கோயிலும், பசுமையான மரங்கள்தான். விளையாட்டு மைதானம் தவிர்த்து வளாகம் முழுவதும் மரங்கள் வளர்த்து அதன் நிழலில் கற்பித்தல் பணிகள் நடக்கின்றன. நல்ல சுவாசமும், வெயில் காலங்களில் குளிர்ச்சியும், மன அமைதி, சுற்றுச்சூழல் ஏற்படுவதோடு மாணவர்கள் கவனம் சிதராமல் படிப்பதற்கு உகந்த சூழ்நிலை உள்ளது. மாணவர்களின் முயற்சியால் பள்ளிக்கு கிடைத்த பொக்கிஷங்களாக நினைத்து மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றோம். மரங்கள் அழிவதனால் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, மழை குறைவு, உயிரினங்கள் அழியும் நிலை குறித்து மரங்கள் நடுவது, மாடித்தோட்டம் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
அந்த வகையில் மரம் வளர்ப்பு, வாகன புகை, பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. என்.சி.சி., என்.எஸ்.எஸ்., பசுமை படை மாணவர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள் நடத்தி வருகின்றோம்., என்றார்.