/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு
/
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு
ADDED : ஜன 18, 2024 02:33 AM
தேனி:பொது சுகாதாரத்துறை சார்பில் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் மற்றும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க்கான 'மெட்பார்மின்', ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மூத்த குடிமக்களிடம் பதிலளிக்க இயலாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர்.
மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையிலும், நோயால் பாதித்தவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் அறிமுகப்படுத்தியது. அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
சென்னை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இங்கு பாதிக்கப்பட்டோரின் முதலுதவிக்காகவும் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்த மருந்து, மாத்திரைகள் அனுப்பப்பட்டன. இதனால் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மட்டுமின்றி, மருத்துவமனையிலும் போதிய அளவில் மாத்திரைகள் இல்லை.
குறிப்பாக காய்ச்சல் மாத்திரை டோலோ 650, சர்க்கரை நோய்க்கான 'மெட்பார்மின் , சளி, இருமல் பாதிப்புக்கு வழங்கப்படும் டானிக், முதலுதவி கிட்கள் பற்றாக்குறையாக உள்ளது. களப்பணியாளர்கள் பணியாளர்கள் தவிக்கின்றனர்.
தேனி மருத்துவககல்லுாரி மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 'தேவையான மாத்திரை, மருந்துகள், சிரிஞ்ச், டானிக் பாட்டில்கள், முதலுதவி கிட் ஆகியவற்றின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்' என்றனர்.