/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாறு அணையில் 'ரூல்கர்வ்' முறை நீக்கப்படுமா: தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்
/
முல்லைப்பெரியாறு அணையில் 'ரூல்கர்வ்' முறை நீக்கப்படுமா: தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணையில் 'ரூல்கர்வ்' முறை நீக்கப்படுமா: தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணையில் 'ரூல்கர்வ்' முறை நீக்கப்படுமா: தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 09, 2025 02:03 AM

கூடலுார்: 'முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பான 'ரூல்கர்வ்' நடைமுறையை நீக்க வேண்டும்' என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை 152 அடி தண்ணீர் தேக்கும் வகையில் கட்டப்பட்டது. 1979ல் அணை பலவீனம் அடைந்து விட்டதாக கூறி, கேரள அரசியல்வாதிகள் புகார் கூறினர். இதனைத் தொடர்ந்து அணையை பலப்படுத்துவது எனவும் அப்பணி முடியும் வரை நீர்மட்டத்தை குறைத்து 136 அடியாக நிலை நிறுத்துவது எனவும், தமிழக --கேரள மாநில அரசுகளுக்கு இடையே முடிவு செய்யப்பட்டது.
அணை நீரை நம்பி தமிழகப் பகுதியில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் இருந்தன. நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் தேனி மாவட்டம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் ஒரு போக சாகுபடியாக மாறியது. இந்நிலையில் தமிழக அரசு, விவசாயிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பின் உயர்ந்த பட்ச அளவான 152 அடியாக்கிக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் அந்தாண்டு பெய்த கன மழையால் 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டது.
பேபி அணையை பலப்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 152 அடியாக உயர்த்திக் கொள்வதற்கான நடவடிக்கைக்கு கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை விதித்தது.
மேலும் அணையில் மாதந்தோறும் தேக்க வேண்டிய நீர்மட்டத்தின் அளவு குறித்த 'ரூல்கர்வ்' நடைமுறையையும் பின்பற்றியதால் கூடுதல் மழை காலங்களில் உயர்ந்த பட்ச அளவான 142 அடியைக் கூட தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 'ரூல்கர்வ்' நடைமுறையை நீக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறை
அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்: அணையில் 142 அடி நீரை தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு மாதந்தோறும் தேக்க வேண்டிய அளவு குறித்த 'ரூல்கர்வ்' நடைமுறை எதற்காக பின்பற்ற வேண்டும்.
தென்மேற்கு பருவமழை காலங்களில் இந்த நடைமுறையால் அணையில் கூடுதல் நீரை தேக்க முடியாமல், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதனால் 'ரூல்கர்வ்' நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு எதிராக தமிழக விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களை விரைவில் நடத்துவோம்., என்றார்.