ADDED : ஏப் 16, 2025 08:32 AM

தேனி : ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 3லட்சம் மரக்கன்றுகள், மூலிகை செடிகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிராமங்களில் பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.
இதில் குளங்கள், கண்மாய்கள் துார்வாருதல், ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்தல், உள்ளூர் விவசாய பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றிய பகுதிகளிலும் இந்த திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியும் நடந்து வருகிறது. பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்டு ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு வேம்பு, இலுப்பை,செம்மரம்,இலவம், சீத்தா, புங்கை, நெல்லி, உள்ளிட்ட மரங்கன்றுகள், ஒமவள்ளி, துளசி, துாதுவளை உள்ளிட்ட மூலிகை செடிகள், பல்வேறு வகையான பூ, அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தாண்டு மாவட்டம் முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி விரைவில் துவங்கும்,' என்றார்.