/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அறிவித்த நேரம் வேறுமின்தடை நேரம் வேறு
/
அறிவித்த நேரம் வேறுமின்தடை நேரம் வேறு
ADDED : ஜூலை 17, 2025 03:24 AM
தேனி: மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் மின் வினியோகம் நேற்று மாலை 4:00 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் 55 நிமிடங்கள் கழித்து மின் வினியோகம் சீரானது.
இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தேனி நகர் உதவி பொறியாளர், செயற்பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, கலெக்டரிடம் மின் நுகர்வோர் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
தேனி நகர் பகுதி மாவட்ட தலைநகரம் மட்டும் இன்றி, வர்த்தக பகுதியாகும். இந்நகர் பகுதிகளில் அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைபுதுார், பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நேற்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
ஆனால் மாலை 4:00 மணிக்கு வினியோகிக்க வேண்டிய மின் வினியோகம் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு மணி நேரம் 55 நிமிடங்கள் கழித்து, குறிப்பாக மாலை 5:55 மணிக்கு வினியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கண்டு கொள்ளாமல் அலட்சியம் காண்பிப்பதால், இதுபோன்ற அலட்சிய போக்கு தொடர்ந்து நடக்கிறது. இதனால் நகர்பகுதியில் நேற்று சிறு, குறு வியாபாரிகள், உற்பத்தி மேற்கொள்வோர், அலுவலகம் நடத்துவோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மின் வினியோகம் கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டதால் குழந்தைகள், முதியவர்களுடன் வசிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அலட்சியமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட பொது மக்கள் புகார் அளிக்க உள்ளனர்.