/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்பு
/
கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்பு
கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்பு
கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்பு
ADDED : ஜன 30, 2024 06:50 AM

ஆண்டிபட்டி : ரோசனப்பட்டியில் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி ஒன்றியம், மொட்டனூத்து ஊராட்சி ரோசனப்பட்டியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக கொண்ட இக்கிராமத்தில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை, எரியாத தெரு விளக்குகள், சுத்தம் செய்யாத வடிகால் போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேறாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றிட கோரி பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் பல மாதங்களாக நிறைவேற்றப்படாததால் தங்கள் பிரச்னைகளை யாரிடம் கொண்டு சென்று தீர்வு காண்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஊராட்சியில் நிலவும் பிரச்னைகள் பொது மக்கள் கருத்து:
குடிநீர் தட்டுப்பாடு
மணிமேகலை, ரோசனப்பட்டி: பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீர் தினமும் ஒரு மணி நேரம் கூட வினியோகிப்பது இல்லை.
கிராமத்தில் போர்வெல், பொதுக்கிணறுகளும் இல்லை. தண்ணீருக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தோட்டத்து கிணறுகளில் தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது.
கிராமத்தில் போர்வெல் அமைத்து தேவையான பகுதிகளில் தரைமட்ட தொட்டி அமைத்து எந்நேரமும் போர்வெல் நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தண்ணீர் பிரச்சினை குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை தெரிவித்தும் தீர்ப்பதற்கான வழி இல்லை.
கழிவுநீர் தேக்கத்தால் கொசு தொல்லை
பி.எசக்கர், ரோசனப்பட்டி: இக் கிராமத்தில் பெண்களுக்காக செயல்படும் ஒரே சுகாதார வளாகம் மட்டும் உள்ளது. இதுவும் பராமரிப்பில்லாததால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. ஆண், பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம் கூடுதலாக கட்ட வேண்டும்.
போதிய கழிப்பிட வசதி இல்லாததால் கிராமத்தைச் சுற்றி பல இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது. குடிநீர் பகிர்மானம் முறையாக இல்லை.
கிராமத்தில் வினியோக நேரத்தில் ஒருபகுதியில் அடைப்புகள் இல்லாத குழாய் வழியாக வெளியேறி வீணாகிறது. மேடான பகுதிகளில் வினியோகம் பாதித்து குடிநீர் கிடைப்பதில்லை.
கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சரிசமமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் வசதி இல்லாத தெருக்களில் தேங்கும் கழிவு நீரால் கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.
கிராமத்தில் ஊர் புற நூலகம் அமைக்க வேண்டும். கிராமத்து குளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது. குளத்தை சுத்தம் செய்து மழை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் வசதி இன்றி சிரமம்
ப.மகேஸ்வரன், ரோசனப்பட்டி: கிழக்குத் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து சாயும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனை மாற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாடு பகுதியில் இறுதி சடங்குகள் செய்யும் இடத்தில் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கிராமத்தின் பல தெருக்களில் வடிகால் வசதி, சிமென்ட் ரோடு இல்லை. எரியாத தெருவிளக்குகள் பல மாதமாக மாற்றப்படவில்லை.
விரிவாக்கப் பகுதிகளுக்கு கூடுதல் தெரு விளக்குகள் வேண்டும். கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் வசதி இல்லை.
கிராமத்திற்கு இயக்கப்பட்ட மினி பஸ் நிறுத்தப்பட்டதால் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. அதிகாரிகள் இக்கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி நிலைமைக்கு ஏற்ப வசதிகள்
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியில் அடிப்படை தேவைகளுக்கான அரசு நிதி போதுமானதாக இல்லை. கிடைக்கும் நிதியை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரோசனப்பட்டி கிராமத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வடிகால், சிறு பாலம், பேவர் பிளாக் உள்ளிட்ட பணிகள் தேவையான இடங்களில் மேற்கொள்ளப்படும்.
நிதி நிலைமைக்கு ஏற்ப புதிய தெருவிளக்குகள், போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.