/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாகன கட்டணம் வசூலிக்க டெண்டர் விட கோரி நெருக்கடி! தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தவிப்பு
/
வாகன கட்டணம் வசூலிக்க டெண்டர் விட கோரி நெருக்கடி! தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தவிப்பு
வாகன கட்டணம் வசூலிக்க டெண்டர் விட கோரி நெருக்கடி! தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தவிப்பு
வாகன கட்டணம் வசூலிக்க டெண்டர் விட கோரி நெருக்கடி! தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தவிப்பு
ADDED : பிப் 23, 2024 05:50 AM
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இம் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை இலவசமாக வழங்குவதால் தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல் மற்றும் கேரளமாநிலத்தில் இருந்தும் அதிகமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நோயாளிகள் மற்றும் உடன் வரும் உதவியாளர்கள் டூவீலர், ஆட்டோ, கார்களில் இங்கு வருகின்றனர்.
கடந்த ஆண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க டெண்டர் விடப்பட்டிருந்தது. இதில் டூவீலருக்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தினமும் பல ஆயிரம் ரூபாய் வசூல் குவிந்தது.
ஒப்பந்த காலம் முடிந்தும் இரு மாதங்களாக சிலர் விதிமீறி கட்டணம் வசூலித்தனர். இதையறிந்த மருத்துக்கல்லுாரி நிர்வாகம் வசூலில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பியது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் முதல் டூவீலர், வாகனங்களில் சிகிச்சைக்கு வருபவர்கள், சிகிச்சையில் உள்ளவர்களை பார்க்க வருபவர்கள் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தி எடுத்து செல்கின்றனர்.
ஏற்கனவே வசூலில் ருசிபார்த்தவர்கள் தற்போது அரசியல் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசில் வந்து வாகன வசூலுக்கு டெண்டர் விடக் கோரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு தொடர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அரசியல் பிரமுகர்கள் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அலைபேசியில் பேசி நெருக்கடி தருகின்றனர்.
அரசியல்வாதிகளின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் தவிக்கிறது.
கடந்த காலங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் இருந்தது. இந்த உத்தரவை பின்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.