/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடிப்படை வசதி செய்து தரக்கோரி நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் பெரியகுளம் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு
/
அடிப்படை வசதி செய்து தரக்கோரி நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் பெரியகுளம் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு
அடிப்படை வசதி செய்து தரக்கோரி நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் பெரியகுளம் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு
அடிப்படை வசதி செய்து தரக்கோரி நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் பெரியகுளம் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஜன 30, 2024 07:05 AM

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி கூட்டம் நடந்த போது அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வார்டு பொது மக்கள் நகராட்சி தலைவரை முற்றுகையிட்டனர்.
பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் மீனா, துணைத் தலைவர் ராஜாமுகமது (தி.மு.க.,), பொறியாளர் ராஜேஷ், மேலாளர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் அசன் முகமது முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசியதாவது:
முகமதுஅலி (தி.மு.க.,): நகராட்சி கூட்டத்தை 86 நாட்களுக்கு பிறகு தாமதமாக நடத்துவதால் வார்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
வெங்கடேசன் (அ.ம.மு.க.,): நகராட்சியில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடையில் அடைப்புகளை எடுக்கும் 'ரோபோடிக் மிஷின்' பல மாதங்களாக ஏன் பயன்படுத்துவதில்லை. மில்லர் ரோட்டில் மீன் கடைகள் அதிகரித்து வருகிறது. கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ராஜேஷ் (பொறியாளர்): ரோபாட்டிக் மிஷின் இயக்குவதற்கு விரைவில் ஆட்களை நியமிக்க உள்ளோம்.
சுதா (தி.மு.க.,): 14வது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள் என பலமுறை நகராட்சி கூட்டத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
அப்போது இந்த வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூட்டம் நடந்த அறைக்குள் வந்து தலைவரை முற்றுகையிட்னர். இதனால் 20 நிமிடம் கூட்ட அரங்கில் குழப்பம் நீடித்தது.
கமிஷனர்: மன்ற கூட்டம் நடக்கும் அரங்கிற்குள் இவ்வாறு வருவது தவறு, வெளியே செல்லாவிட்டால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
அதன்பின் தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நகராட்சி தலைவரிடம் மனு அளித்து சென்றனர்.
குமரன் (பா.ம.க.,): நகராட்சி கூட்டம் நடக்கும் போது இரண்டாவது முறையாக முற்றுகை சம்பவம் நடந்துள்ளது.
வரும் காலங்களில் கூட்டம் நடக்கும் போது கவுன்சிலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கமிஷனர்: இனி வரும் காலங்களில் நகராட்சி கூட்டம் போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பவானி: வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. பொதுக் குழாய் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நகராட்சி 30 வார்டுகளில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் வால்வு பழுது நீக்க பணி மேற்கொள்வது உட்பட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. -