/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்ட தாமதம்
/
வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்ட தாமதம்
ADDED : ஆக 17, 2025 12:23 AM
ஆண்டிபட்டி; நீர்வரத்து குறைந்ததால் வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்ட தாமதமாகிறது.
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். கடந்த சில வாரங்களாக பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஆக. 5 ல் நீர்மட்டம் 69 அடியானதை தொடர்ந்து அணையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. வழக்கமாக 69 அடிக்கு பின் அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்படும்.
தற்போது மழைக்கான சூழல் இல்லாததால் 70 அடிவரை நீரை தேக்க நீர்வளத் துறையினர் முடிவு செய்தனர். ஆக. 14 ல் நீர்மட்டம் 69.88 அடி வரை உயர்ந்தது(மொத்த உயரம் 71 அடி).
இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடி வரை குறைந்துள்ளது. வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 869 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரும், வெளியேறும் நீரும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதால் நீர்மட்டம் 70 அடியை தொடுவதில் தாமதம் ஏற்படுகிறது.