/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் விளைச்சல் குறைவால் இளநீர் தட்டுப்பாடு: வரத்து குறைவால் விலையும் உயர்ந்தது
/
மாவட்டத்தில் விளைச்சல் குறைவால் இளநீர் தட்டுப்பாடு: வரத்து குறைவால் விலையும் உயர்ந்தது
மாவட்டத்தில் விளைச்சல் குறைவால் இளநீர் தட்டுப்பாடு: வரத்து குறைவால் விலையும் உயர்ந்தது
மாவட்டத்தில் விளைச்சல் குறைவால் இளநீர் தட்டுப்பாடு: வரத்து குறைவால் விலையும் உயர்ந்தது
ADDED : ஏப் 24, 2025 06:12 AM

தேனி: மாவட்டத்தில் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் இளநீர் விற்பனை கடைகளை மூடியுள்ளனர். வரத்து குறைந்ததால் கடந்த ஆண்டை விட இளநீர் விலை அதிகரித்து ரூ.50க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 9ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம், போடி, சின்னமனுார், சீலையம்பட்டி, உத்தமபாளையம் பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. குளிர்பானங்கள், பழஜூஸ்கள் பருகினாலும் இளநீர் குடிப்பதை அதிகம் விரும்புகின்றனர்.
ஆனால் இளநீர் விலை உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் விலையை கேட்டு விலகி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட சிறிய அளவு இளநீர் ரூ.10 அதிகரித்து ரூ.50க்கு விற்கப்படுகிறது. செவ்விளநீர் ரூ.60க்கு விற்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், தென்னை பயிரை கடந்தாண்டு வேர்வாடல் நோய் தாக்கியது.இதன்பின் வெப்ப அலை வீசியதால் தென்னையில் குரும்பைகள் உதிர்ந்து உற்பத்தி பாதித்தது. கடந்த சில மாதங்களாக வெள்ளை ஈ தாக்குதலால் உற்பத்தி மேலும் சரிந்தது. இதனால் தோப்பில் ஒரு வெட்டுக்கு 5 ஆயிரம் தேங்காய் கிடைத்த இடத்தில் பாதியளவு தற்போது கிடைக்கிறது. தட்டுபாட்டால் தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயர்வால் இளநீர் வெட்டுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'தேனியை விட கோவை, பொள்ளாச்சியில் தென்னை உற்பத்தி பாதித்துள்ளது. நோய்தாக்குதல்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,' என்றனர்.
வரத்து இல்லாததால் விலை உயர்வு
லட்சுமணன், வியாபாரி, தேனி: மாவட்டத்தில் இளநீர் வரத்து மிக குறைந்துள்ளது. முன்பு மொத்தமாக இளநீர் கொள்முதல் செய்யும் போது அதிகபட்சம் ரூ.20 வரை செலவு ஏற்படும். இந்தாண்டு அனைத்து தோப்புகளிலும் இளநீர் குறைந்துள்ளதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்முதல் விலை குறைந்தபட்சம் ரூ. 25 முதல் ரூ.30 செலவிட வேண்டி உள்ளது.
மாவட்டத்தில் சில பகுதியில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. இதனால் மாவட்டத்தில் இளநீர் விலை உயர்ந்துள்ளது என்றார்.

