/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
35 ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் துண்டிப்பு
/
35 ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் துண்டிப்பு
ADDED : அக் 19, 2025 09:43 PM
கம்பம்: ''கடந்த அக்.17ல் கம்பம் பள்ளத்தாக்கில் பெய்த கனமழையால் முல்லைப் பெரியாற்றில் அமைக்கப்பட்டு இருந்த 30 க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் வெள்ள நீரில் மூழ்கியதால், 35 ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாற்றில் 1993க்கு பின் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது. சுருளிப்பட்டி, காமய கவுண்டன்பட்டி, உத்தமபாளையம், வீரபாண்டி ஆகிய ஊர்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்தன.
முல்லைப் பெரியாற்றுக்குள் 30 க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைத்து சுருளிப்பட்டி, கோகிலாபுரம், உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, சின்னமனுார், சீலையம்பட்டி, எல்லப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் குடிநீர் வினியோகமாகிறது. இந்த உறைகிணறுகள் அனைத்தும் மழை வெள்ள நீரில் மூழ்கின. தண்ணீர் வடிந்தால் தான் உறைகிணறுகளின் நிலை தெரியும். மண் மேவி மேடாகியிருக்கும். மேலும் குப்பை கூளங்கள், செடி கொடிகள் அடைத்திருக்கும். இதனால் குடிநீர் 'பம்பிங்' செய்ய முடியாது. இதனால் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 35க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உறை கிணறுகள் மட்டும் இன்றி பிரதான பகிர்மான குழாய்கள், மின்மோட்டார்களின் நிலை பற்றியும் தெரியவில்லை. கம்பம் நகராட்சிக்கு லோயர் கேம்ப், சுருளிப்பட்டி ஆகிய 2 ஊர்களில் பம்பிங் செய்து குடிநீர் விநியோகம் ஆகிறது. இதில் சுருளிப்பட்டி உறை கிணறு மூழ்கியுள்ளது. பம்பிங் மோட்டார் நிலை தெரியவில்லை. இருந்த போதும் லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனை வைத்து சமாளிக்க வாய்ப்புள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி உட்பட 9 பேரூராட்சிகளிலும் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலைமை சீரடைய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என, பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் தெரிவித்தனர்.