/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டில் அரசின் பல்துறை சோதனை சாவடி அமையுமா
/
கம்பமெட்டில் அரசின் பல்துறை சோதனை சாவடி அமையுமா
ADDED : பிப் 01, 2024 04:04 AM
கம்பம் : கம்ப மெட்டில் தமிழக அரசு சார்பில் பல் துறை சோதனை சாவடி அமைவது கேள்விக்குறியாகி உள்ளது.
இரு மாநில எல்லையோரங்களில் தத்தம் மாநில அரசுகள் போலீஸ், வருவாய், கால்நடை, வனத்துறை, கலால் உள்ளிட்ட பல்வேறு சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பார்கள். அண்டை மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிப்பார்கள். கடத்தல், சமூக விரோதிகள் நடமாட்டம், ஆயுதங்கள் கொண்டு செல்வது, வெடி பொருள்கள், அரிசி கடத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இது போன்ற சோதனை சாவடிகள் அவசியமாகிறது.
தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பமெட்டு, போடிமெட்டு போன்ற இடங்கள் எல்லையோர நகரங்களாக உள்ளன. இவற்றில் மூன்றிலுமே சோதனை சாவடிகள் சரிவர இல்லை. அதே சமயம் கேரள சார்பில் அனைத்து சோதனை சாவடிகளும் உள்ளன. கம்ப மெட்டில் தற்போது வனத்துறை, போலீஸ் சோதனை சாவடிகள் உள்ளன. ஆனால் - போதிய வசதிகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஒரே வளாகத்தில் பல் துறை சோதனை சாவடி அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
ரேஷன் அரிசி, வெடி பொருள்கள் கடத்தல் அதிகமாக நடைபெறுகிறது. எனவே போலீஸ், போக்குவரத்து, கால்நடை, சுகாதாரத்துறை, வனத்துறை, கலால் துறைகளுக்கான சோதனை சாவடியை அமைக்க அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.