/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட பெண்கள், வாலிபர்
/
வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட பெண்கள், வாலிபர்
ADDED : டிச 19, 2024 12:50 AM

தேனி,:தேனி மாவட்டம், பங்களாமேடு பென்னிகுவிக் நகர், சிவன் கோவில் அருகே வசிப்பவர் கோவிந்தராஜ், 78. நேற்று காலை 5:20 மணிக்கு தேனி முல்லை பெரியாற்றில் குளிக்கச் சென்றார்.
எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். வெள்ளம் அவரை இழுத்து சென்றது. வெள்ளத்தில், 4 கி.மீ., அடித்து செல்லப்பட்டார். அரண்மனைப்புதுார் வழியாக கோட்டைப்பட்டி படித்துறை அருகே முதியவர் அடித்து செல்லப்பட்டார். அப்போது, கோட்டைப்பட்டியை சேர்ந்த ரேணுகா, மீனா, சித்ரா, சாந்தி, படித்துரை அருகே குளித்து கொண்டிருந்தனர்.
முதியவர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்படுவதை பார்த்து, அவரை காப்பாற்றுமாறு சத்தமிட்டனர். அதே படித்துறையில் நடந்து சென்ற குமரேசன், 24, என்ற வாலிபர், ஆற்றில் குதித்து முதியவரை காப்பாற்றி கரை சேர்த்தார்.
மயக்க நிலையில் இருந்த முதியவருக்கு சுவாசம் இருப்பதை உறுதி செய்து, 108 ஆம்புலன்ஸ்க்கு குமரேசன் தகவல் அளித்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரின் காயத்திற்கு சிகிச்சை அளித்தனர்.
முதியவரின் உறவினர்களை வரவழைத்து, அவர் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர். முதியவரை காப்பாற்ற சத்தமிட்டு உதவிய நான்கு பெண்கள், வாலிபர் குமரேசன் ஆகியோரை ஊர் மக்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாராட்டினர்.

