/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்கள் கழிப்பிடம் தண்ணீர் இன்றி பயன்பாட்டிற்கு வராத அவலம்: அம்மச்சியாபுரத்தில் திறந்தவெளி பயன்பாட்டால் நோய் அபாயம்
/
பெண்கள் கழிப்பிடம் தண்ணீர் இன்றி பயன்பாட்டிற்கு வராத அவலம்: அம்மச்சியாபுரத்தில் திறந்தவெளி பயன்பாட்டால் நோய் அபாயம்
பெண்கள் கழிப்பிடம் தண்ணீர் இன்றி பயன்பாட்டிற்கு வராத அவலம்: அம்மச்சியாபுரத்தில் திறந்தவெளி பயன்பாட்டால் நோய் அபாயம்
பெண்கள் கழிப்பிடம் தண்ணீர் இன்றி பயன்பாட்டிற்கு வராத அவலம்: அம்மச்சியாபுரத்தில் திறந்தவெளி பயன்பாட்டால் நோய் அபாயம்
ADDED : ஏப் 05, 2025 05:35 AM

தேனி: ஆண்டிபட்டி ஒன்றியம், அம்மச்சியாபுரம் ஊராட்சியில் கழிப்பிடம் கட்டி ஓராண்டிற்கு மேலாக தண்ணீர் வசதி இல்லாதாதல் திறந்த வெளியை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்மச்சியாபுரம் ஊராட்சி மூல வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஊராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடைகள் சேதமடைந்து திறந்த வெளியில் கழிவுநீர் செல்கிறது.
பல இடங்களில் சாக்கடை துார்வாரி சுத்தம் செய்யாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி கொசுக்கடியால் தவிக்கின்றனர். குழந்தைகள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
திடக்கழிவு மேலாண்மை முறையாக நடைபெறாததால் மூல வைகை கரையில் ஊராட்சியின் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் ஆறு மாசுபடுவதுடன், ஊரின் சுகாதாரம் பாதிக்கிறது.
ஆற்றங்கரையில் ஓராண்டிற்க்கு முன் பெண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டது. அதற்கு ஊராட்சி சார்பில் தண்ணீர் வசதி செய்து தரவில்லை. இதனால் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
இந்த கழிப்பிடத்தை சுற்றி பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் குடல் புழுக்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது.
மேலும் தோட்டங்களுக்கு செல்லும் ரோட்டின் இருபுறமும் திறந்த வெளியாக பயன்படுத்துவதால் துார்நாற்றம் வீசுகிறது. அதே பகுதியில் கோயிலும் அமைந்துள்ளது. இதனால் பக்தர்களும் முகம் சுளிக்கின்றனர்.
சாக்க டை துார் வார வேண்டும்
அறிவானந்தம், ஓய்வு டி.எஸ்.பி., அம்மச்சியாபுரம்: அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னுார் செல்லும் ரோட்டில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாக்கடை வேறு எந்த பகுதியுடனும் இணைக்கப்படாததால் கடந்து செல்ல வழியில்லை.
இதனால் சாக்கடையில் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் சிலர் தடுமாறி விழும் நிலையும் ஏற்படுகிறது. இந்த சாக்கடையை ராஜவாய்க்காலுடன் இணைக்க வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாக்கடைகளை துார்வார வேண்டும்.
குடிநீர் வினியோகம் முறைப்படுத்து வேண்டும்
ராஜலட்சுமி, அம்மச்சியாபுரம்: தெற்கு காலனி தெரு பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் தோட்டங்களில் உள்ள போர்வெல் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது. வீடுகள் தோறும் குழாய் அமைக்கப்பட்டாலும், அந்த குழாய்கள் வழியாக இதுவரை குடிநீர் வழங்கவில்லை.
குடிநீர் வழங்குவதற்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஓராண்டிற்கு மேலாக பயன்பாடின்றி உள்ளது.
இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

