ADDED : அக் 25, 2025 04:50 AM
தேனி: மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. அதன்படி காலாண்டிற்கு 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவருக்கு ரூ. 600, தேர்ச்சி பெற்றவருக்கு ரூ. 900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1200, பட்டம், முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு ரூ. 1800 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி எனில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிப் பவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரியகூடாது. சுயதொழில் செய்ய கூடாது.
உதவித்தொகை பெற விரும்புபவர்கள் http://tnvelaivaaipu.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். அதனை பூர்த்தி செய்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

