/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜெயக்குமார் இறப்பு கொலையா, தற்கொலையா போலீஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை
/
ஜெயக்குமார் இறப்பு கொலையா, தற்கொலையா போலீஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை
ஜெயக்குமார் இறப்பு கொலையா, தற்கொலையா போலீஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை
ஜெயக்குமார் இறப்பு கொலையா, தற்கொலையா போலீஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை
ADDED : மே 14, 2024 09:11 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறப்பில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா கொலையா என்பது குறித்து இன்னும் முடிவுக்கு வரவில்லை என தென் மண்டல ஐ.ஜி., கண்ணன் தெரிவித்தார்.
ஜெயக்குமார் 58, மே 2 இரவு காரில் வெளியே சென்றவர் காணாமல் போனார். மகன் மே 3 மாலை உவரி போலீசில் தந்தை காணாமல் போனது குறித்து புகார் தெரிவித்தார். 4ம் தேதி காலையில் ஜெயக்குமார் உடல்எரிந்த நிலையில் கரைசுத்துபுதுாரில் அவரது வீட்டு தோட்டத்தில் கிடந்தது.
ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 32 நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு எஸ்.பி.,க்கு இரண்டு கடிதங்களை எழுதி வைத்திருந்தார்.
எனவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என ஆரம்பத்தில் போலீசார் விசாரித்தனர். ஆனால் உடல் முழுவதும் கம்பியால் கட்டப்பட்டிருந்ததாலும் வாயில் பாத்திரம் தேய்த்துக் கழுவும் ஸ்கிரப்பர் இருந்ததாலும் அவர் சாவில் மர்மம் உள்ளது என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
10 போலீஸ் குழுக்கள்:
ஆளும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் என்பதாலும் அவர் தனது மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு இருந்ததாலும் கடிதத்தில் முன்னாள் எம்.பி., தங்கபாலு, நாங்குநேரி காங்., எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பெயர்களை குறிப்பிட்டு இருந்ததால் வழக்கின் விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 10 டி.எஸ்.பி.,கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
சந்தேகங்கள்
ஜெயக்குமார் காணாமல் போன மே 2 நள்ளிரவு அவரது கார் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. 3ம் தேதி மாலை மகன் ஜெப்ரின் போலீசில் புகார் அளித்தார். எனவே அவர் 2ம் தேதி இரவிலேயே இறந்து விட்டாரா, 3ம் தேதி இரவில் இறந்தாரா என சந்தேகம் எழுகிறது.
அவர் வாயில் இருந்த ஸ்க்ரப்பர் எனப்படும் சுத்தப்படுத்தும் பொருளின் பகுதிகள், அவர் உடலை சுற்றி கட்டப்பட்டிருந்த கம்பிகள் போன்றவை சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
அவர் இறப்பு குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் முதல் கட்ட தகவல் வந்துள்ளது.
அதிலும் அவர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்பதற்கான உறுதியான தகவல் இல்லை. தோட்டத்து கிணற்றில் கிடைத்த கத்தி, அவர் உடல் எரிந்து கிடந்த இடத்தில் 10 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட எரிந்த டார்ச் லைட், தீப்பெட்டி உள்ளிட்டவையும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் வழக்கில் துப்பு துலங்க முடியாத வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
தென்மண்டல ஐ.ஜி., ஆலோசனை
எனவே நேற்று தென் மண்டல ஐ.ஜி., கண்ணன், திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் மூர்த்தி, டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார், எஸ்.பி., சிலம்பரசன் உள்ளிட்ேடார் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஐ.ஜி., கண்ணன் கூறியதாவது:
ஜெயக்குமாரின் உடலின் முதுகு புறமும் பின்னங்கால் பகுதிகளும் முழுமையாக எரியவில்லை. உடல் முழுவதும் லுாசாக கம்பி சுற்றப்பட்டு இருந்தது. 15 செ.மீ., அகலம் 50 செ.மீ., நீளமுள்ள கடப்பாக்கல் உடலோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர் அவரது வாயில் இருந்தது. அவர் எழுதி இருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 32 நபர்களிடமும் விசாரித்து அறிக்கை பெற்றுள்ளோம். தடயவியல், விரல் ரேகை, சைபர் கிரைம் நிபுணர்கள் முழுமையாக ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள். வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
அவரது உடலில் இருந்து மேற்கொள்ளப்படும் டி.என்.ஏ., உள்ளிட்ட சோதனைகளுக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே அறிவியல் பூர்வமாக விசாரணை நடக்கிறது. தற்கொலை என்றோ கொலையென்றோ இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்போதைக்கு சந்தேக மரணம் என்ற அளவிலேயே விசாரணை நடக்கிறது. பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கையின்படி கொலை என முடிவுக்கு வர முடியவில்லை. உடல் எரிவதற்கு முன் உடலில் காயங்கள் எதுவும் இருந்ததற்கான தடயம் இல்லை. ஏற்கனவே இறந்த உடலை மீண்டும் எரித்ததற்கான தடயமும் இல்லை. சில வழக்குகளை நிரூபிப்பது கஷ்டமானதாகும். ஜெயக்குமாரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை சற்று மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் எந்தச் சூழலில் அந்த கடிதத்தை எழுதினார் என்பது தெரியவில்லை. அதிலும் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள் அவரால் எழுதப்பட்டது தானா என்பது குறித்தும் கையெழுத்து நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை இத்துடன் ஒப்பிட வேண்டாம். ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் என ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. ஆனால் ஜெயக்குமார் வழக்கு இன்னமும் கொலையா, தற்கொலையா என முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது. குடும்ப உறுப்பினர்கள், அவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளவர்கள், அரசியல் ரீதியானவர்கள் என அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.
ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு குறித்தும் எழுதியுள்ளார். தேவைப்பட்டால் சபாநாயகர் அப்பாவுவிடமும் விசாரணை மேற்கொள்வோம்.
விரைவில் இந்த வழக்கில் துப்பு துலக்குவோம் என்றார்.

