/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பள்ளி வகுப்பறையில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு சக மாணவன் வெறிச்செயல்; தடுத்த ஆசிரியைக்கும் வெட்டுக்காயம்
/
பள்ளி வகுப்பறையில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு சக மாணவன் வெறிச்செயல்; தடுத்த ஆசிரியைக்கும் வெட்டுக்காயம்
பள்ளி வகுப்பறையில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு சக மாணவன் வெறிச்செயல்; தடுத்த ஆசிரியைக்கும் வெட்டுக்காயம்
பள்ளி வகுப்பறையில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு சக மாணவன் வெறிச்செயல்; தடுத்த ஆசிரியைக்கும் வெட்டுக்காயம்
ADDED : ஏப் 16, 2025 12:52 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி ரோஸ்மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவரை, சக மாணவனை வகுப்பறையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினான்.
தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வெட்டிய மாணவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை, ரோஸ்மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு ஆசிரியை ரேவதி, நேற்று காலை, முதல் பாடவேளை முடிந்து அடுத்த வகுப்பிற்கு செல்ல தயாரானார்.
விசாரணை
அப்போது, வகுப்பறையில் பின் பெஞ்சில் இருந்த மாணவன் ஒருவன், பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, முன் பெஞ்சில் இருந்த சக மாணவனை சரமாரியாக வெட்டினான்.
இதில், அந்த மாணவனின் தலை, தோள்பட்டை, முதுகு, வலது மற்றும் இடது கைகளில் வெட்டு விழுந்தது.
இதைக்கண்டு வகுப்பறையிலிருந்த மற்ற மாணவ -- மாணவியர் அலறினர். வாசலில் நின்ற ஆசிரியை ரேவதி வகுப்பறைக்குள் ஓடிச்சென்று, மாணவனை மேலும் வெட்டாமல் தடுத்தார்.
அப்போது, ஆசிரியைக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரிவாளால் வெட்டிய மாணவன், சட்டையில் ரத்தம் தோய்ந்த நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து சென்றான்.
மாணவனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
காயமுற்ற மாணவனும், ஆசிரியையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் வெளியானதும், மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன் குவிந்தனர். குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளியில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
வெட்டப்பட்டு, காயமுற்ற மாணவனின் தந்தை மேலப்பாளையம் நிஜாமுதீன், தாய் செய்யது ஜாஸ்மின் ருஷானா மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வந்தனர்.
காரணம் என்ன?
வெட்டிய மற்றும் வெட்டுப்பட்ட மாணவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். பென்சில் கொடுக்கல், வாங்கலில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. ஒரு மாதமாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவர்களை, ஆசிரியையும் கண்டித்துள்ளார்.
மாணவர்களின் பெற்றோரையும் அழைத்து பேசி, ஆசிரியர்கள் கண்டித்து அனுப்பியுள்ளனர். இரு மாணவர்களும் வெவ்வேறு பெஞ்சுகளில் உட்கார வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வரும் போது, பையில் அரிவாளுடன் வந்த மாணவன், அந்த மாணவனை வெட்டியுள்ளான்.
போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, துணை கமிஷனர் வினோத் சாந்தாராம், உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்தனர்.
வெட்டிய மாணவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும், விசாரணைக்கு பின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் அவரை ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தார். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆயுதங்களை கொண்டு வருவதை தவிர்க்க, பைகளை சோதனையிடும் முறையை கண்டிப்பாக செயல்படுத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
சீர்திருத்த பள்ளிக்கு போகணும்!
திருநெல்வேலியில் சக மாணவனை
அரிவாளால் வெட்டிய மாணவனிடம், போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவன், 'சமூக வலைத்தளங்கள், சினிமா, யு டியூப் பார்த்து, நானும்
அதுபோல் சம்பவம் செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் என் நண்பனையே
அரிவாளாள் வெட்டி விட்டேன். என்னை சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள்' என, கூறியுள்ளார். மாணவனை போலீசார் இரவு வரையிலும்
சிறார் குழும நீதிபதியிடம் ஆஜர்படுத்தவில்லை. தொடர்ந்து, அவனுக்கு குழந்தை
பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான குழுவினர் கவுன்சிலிங் வழங்கினர்.