UPDATED : நவ 10, 2026 06:35 PM
ADDED : நவ 10, 2026 06:31 PM
திருநெல்வேலி: தமிழகத்தில் துணை சபாநாயகர் மீதான புகார், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு, போலீஸ் கொலை உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய்க்கு எதிராக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கச் சென்ற ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. பின்னர் அந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபரை ரவிசங்கர் மீண்டும் மிரட்டும் வகையில் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது. மாவட்ட கலெக்டருக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்.
ரோட்டில் பட்டாசு வெடிக்கக் கூடாது என அறிவுறுத்திய போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியளிக்கிறது. போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது கவலைக்குரியது.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்களை மக்கள் கவனித்து வருகின்றனர். உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
