/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோவிலில் தங்க நாதஸ்வரம் வாசிப்பு
/
நெல்லையப்பர் கோவிலில் தங்க நாதஸ்வரம் வாசிப்பு
ADDED : மே 22, 2025 02:21 AM

திருநெல்வேலி,:நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவிலில் வசந்த உத்சவ விழாவில், 45 ஆண்டுகளுக்கு பின் தங்க நாதஸ்வரம் இசைக்கப்பட்டது.
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவிலில், மே 13ல் வசந்த உத்சவம் துவங்கியது.
நீர் நிரப்பப்பட்ட வசந்த மண்டபத்தில், சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் எழுந்தருளி, பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோடைக்காலத்தில் வெப்பம் தணியும் வகையில் பிரார்த்தனை செய்யப்பட்டு வெள்ளரிக்காய், பானகம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து சிறப்பு பூஜை, அபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், வசந்த மண்டபத்தில் சுவாமி - அம்பாள் ஏழு முறை வலம் வந்தனர்.
முதல் சுற்றின்போது மல்லாரி இசையும், இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம், மூன்றாவது சுற்றில் வேதபாராயணம், நான்காவது சுற்றில் ருத்ர ஜபம் செய்யப்பட்டன.
ஐந்தாவது சுற்றில் தங்க நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. ஆறாவது சுற்றில் பஞ்சவாத்யமும், ஏழாம் சுற்றில் நாதஸ்வரம், தவில் இசைக்கப்பட்டன. கடந்த 45 ஆண்டுகளாக தங்க நாதஸ்வரம் பழுதுபட்டு இருந்ததால், வசந்த உத்சவத்தின் போது இசைக்கப்படாமல் இருந்தது.
இந்த ஆண்டு, தங்க நாதஸ்வரத்தை கோவில் நாதஸ்வர கலைஞர் சரவணன் மற்றும் இசை கலைஞர்கள் இசைத்தனர்.
அதில் தியாகராஜர் கீர்த்தனைகள் வாசிக்கப்பட்டு சுவாமி - அம்பாள் வலம் வந்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.