மழை பெய்யும்... விடுமுறை கிடைக்குமா கலெக்டரிடம் கெஞ்சிய மாணவர்கள் நெல்லை தமிழில் பதிலளித்த கலெக்டர்
மழை பெய்யும்... விடுமுறை கிடைக்குமா கலெக்டரிடம் கெஞ்சிய மாணவர்கள் நெல்லை தமிழில் பதிலளித்த கலெக்டர்
UPDATED : அக் 26, 2026 08:56 PM
ADDED : அக் 26, 2026 08:54 PM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கனமழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு வெளியான நிலையில், மழை பெய்யாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மாணவர்கள், கலெக்டர் ஆனந்த்மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுமுறை கேட்டு கெஞ்சியதும், அதற்கு அவர் திருநெல்வேலி வட்டாரத் தமிழில் சுவாரசியமாகப் பதிலளித்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அக்.25, 26ல் கனமழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு வெளியானது. ஆனால், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு நேற்று திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்த மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து, மாணவர்கள் பலர் கலெக்டரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எங்கள் வீட்டுக்கு முன் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. ஒரே மன உளைச்சலாக இருக்கிறது. தயவுசெய்து விடுமுறை விடுங்கள்' எனக் கோரிக்கை விடுத்தனர்.
சில மாணவர்கள், 'விடுமுறை விடாவிட்டால் நீங்கள் கலெக்டராக இருப்பதில் என்ன பயன்? ஐ.ஏ.எஸ்., ஆக நீங்க பெயிலாகிவிட்டீர்கள்?' என்பது போன்ற கிண்டலான பதிவுகளையும் வெளியிட்டனர். இன்னும் சிலர், மழை பெய்தால் பள்ளிக்குச் செல்ல முடியாது என்றும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கலெக்டரின் சுவாரசியமான பதில்!
மாணவர்களின் பதிவுகளுக்குப் பதிலளித்த கலெக்டர் ஆனந்த்மோகன், திருநெல்வேலி வட்டாரப் பேச்சு வழக்கிலேயே நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
அதில், 'ஆனா இங்க சில பேரு லீவு விடலனா கலெக்டராவே ஃபெயில்னு, பர்த்டே டேட், ரொம்ப டிப்ரஷனா இருக்குன்னு இன்ஸ்டாகிராம்ல ஆஸ்கார் லெவலுக்கு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கானுவ. உங்க கஷ்டம்லாம் புரியுது, ஆனா இந்த ஓவரு ஆக்டிங் தாண்டா தாங்க முடியல!
கவலைப்படாதீங்க, நிஜமாவே கனமழை பெஞ்சா, நீங்க யாருமே கேக்காமலேயே லீவு வரும். உங்க சேஃப்டிக்கு இந்த கலெக்டர் அங்கிள் எப்பவும் கேரண்டி!' புக்க பார்த்து படிங்க எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் விடுமுறைக் கோரிக்கையும், அதற்குக் கலெக்டர் அளித்த நகைச்சுவையான பதிலும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன. கனமழை பெய்தால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்ற அவரது பதிவு பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
படம் 1 உள்ளது
