/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரூ.39 கோடியில் கட்டப்பட்ட கண்டியப்பேரி ஜி.எச்., டாக்டர்கள், நர்சுகள் நியமிக்க எதிர்பார்ப்பு
/
ரூ.39 கோடியில் கட்டப்பட்ட கண்டியப்பேரி ஜி.எச்., டாக்டர்கள், நர்சுகள் நியமிக்க எதிர்பார்ப்பு
ரூ.39 கோடியில் கட்டப்பட்ட கண்டியப்பேரி ஜி.எச்., டாக்டர்கள், நர்சுகள் நியமிக்க எதிர்பார்ப்பு
ரூ.39 கோடியில் கட்டப்பட்ட கண்டியப்பேரி ஜி.எச்., டாக்டர்கள், நர்சுகள் நியமிக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 30, 2025 01:28 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி டவுனில், ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், 39 கோடியில் கட்டப்பட்ட, 100 படுக்கைகள் கொண்ட கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு பிரத்யேகமாக டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்க, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருநெல்வேலி டவுன், கண்டியப்பேரியில் செயல்பட்ட ராமசாமி நினைவு அரசு மருத்துவமனை, கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், 35 கோடியில், 100 படுக்கைகள் கொண்ட அடுக்குமாடி மருத்துவமனையாக கட்டப்பட்டுள்ளது.
ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், அறுவை அரங்குகள், மருத்துவ கருவிகள் என, 4 கோடிக்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம், 39 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, மகப்பேறு, முட நீக்கியல், அறுவை சிகிச்சை என பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.
15 -- 20 நோயாளிகள்
தினமும் நுாற்றுக்கணக்கில் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால், உள்நோயாளிகளாக 15 -- 20 நோயாளிகள் மட்டுமே உள்ளனர்.
காரணம், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து 45 நர்ஸ்கள், 25 டாக்டர்கள் வருகின்றனர்.
டாக்டர்களில் பெரும்பாலும் முதுகலை மாணவர்களே வருகின்றனர். மூன்று ஷிப்ட்களில் இயங்கும் மருத்துவமனை இன்னும் முழுமையாக செயல்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனைக்கு மகப்பேறுக்கு அழைத்து வரப்பட்ட கர்ப்பிணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு கண்டியப்பேரி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர்.
அவர் அங்கு ஆட்டோவில் செல்வதற்குள் சிசு இறந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. இங்கு நிரந்தர டாக்டர்கள், நர்ஸ்கள் இருப்பரா, போதிய அறுவை சிகிச்சைகள் நடக்குமா என்ற சந்தேகத்தால் நோயாளிகள் இங்கு வருவதை தவிர்க்கின்றனர்.
கண்டியப்பேரி மருத்துவமனைக்கு நிரந்தரமாக டாக்டர்கள் நியமித்தால் தான், அவர்களை நம்பி நோயாளிகள் சிகிச்சைக்கு வருவர்.
பற்றாக்குறை
திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் தற்போது பல்நோக்கு மருத்துவமனை, உயர் சிகிச்சை மையம் என விரிவாக்கங்கள் நடந்துள்ளன. அங்கிருந்து டாக்டர்கள், நர்ஸ்களை கண்டியப்பேரிக்கு அனுப்புவதால் அங்கும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்டியப்பேரி மருத்துவமனைக்கு என கூடுதல் எண்ணிக்கையில் டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்பட வேண்டும் என, டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் எதிர்பார்க்கின்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி டீன் டாக்டர் ரேவதி பாலன் கூறுகையில், ''திருநெல்வேலி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் உள்ளனர். எப்போதும் பற்றாக்குறை கிடையாது. கண்டியப்பேரி மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது,'' என்றார்.