/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தேசிய மனித உரிமை ஆணையம் மாஞ்சோலையில் விசாரணை
/
தேசிய மனித உரிமை ஆணையம் மாஞ்சோலையில் விசாரணை
ADDED : செப் 19, 2024 01:55 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணைக்கு மேலே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற மும்பை நிறுவனம், 99 ஆண்டுகள் குத்தகைக்கு ஏற்று நடத்துகிறது.
வரும் 2028ல் குத்தகை காலம் நிறைவடையும் நிலையில், முன்னதாகவே பி.பி.டி.சி. நிறுவனம் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் கட்டாய விருப்ப ஓய்வு கடிதம் பெறப்பட்டது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நேரடியாக புகார் செய்தார்.
இது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பிய குழுவினர் நேற்று திருநெல்வேலிக்கு வந்தனர்.
டி.எஸ்.பி., ரவி சிங், இன்ஸ்பெக்டர் யோகேந்தர் குமார் திரிபாதி கொண்ட அந்த குழு கலெக்டர் கார்த்திகேயன், எஸ்.பி., சிலம்பரசன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா, தொழிலாளர் நல துறை மண்டல இணை ஆணையாளர் சுமதி ஆகியோரிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் 1,100க்கும் மேற்பட்ட பக்க அறிக்கை தரப்பட்டது. ஆணைய குழுவினர் நேற்று மதியம் மாஞ்சோலை எஸ்டேட் சென்றனர். அவர்களுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் சென்றார்.
மாஞ்சோலையில் குழுவினர் தரையில் அமர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் சென்றும் கருத்து கேட்டனர். செப்., 21 வரை குழுவின் விசாரணை நடக்க உள்ளது.