UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 11:44 PM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பிரபல ரவுடி ஷ்யாம் பிரபாகர், 35, என்பவர் வெட்டி கொல்லப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை எம்.கே.பி., நகர் பகுதியை சேர்ந்தவர் ஷ்யாம் பிரபாகர்; ரவுடி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பெயின்டிங், பாலிஷ் தொழில் செய்து வந்தார். இவர் மீது, மூன்று கொலை வழக்குகள், இரு கொலை முயற்சி வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று இரவு 9:00 மணியளவில் டூ – வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஷ்யாம் பிரபாகரை, எம்.கே.பி., நகரில் உள்ள எம்.ஜி.ஆர்.மன்றம் அருகே மற்றொரு டூ – வீலரில் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர், திடீரென வழிமறித்தனர். பின்னர், அவரை அரிவாளால் வெட்டி தப்பி சென்றனர். இதில், ஷ்யாம் பிரபாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
