UPDATED : நவ 14, 2026 08:42 PM
ADDED : நவ 14, 2026 08:42 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வடலிவிளை பகுதியில் அரிய வகை சிவப்பு நிற தேரி மண்ணை அனுமதியின்றி ராட்சத இயந்திரங்கள் மூலம் பல அடி ஆழம் வரை தோண்டி எடுத்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
விவசாயம் செய்வதாகக் கூறி தேரிக்காட்டு நிலங்களை விலைக்கு வாங்கும் கும்பல்கள், அங்குள்ள பனை மரங்களை அகற்றி மண்ணை தோண்டி செங்கல் தயாரித்து கேரளாவுக்கு விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விவசாயம் மற்றும் பனைத் தொழிலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என திருநெல்வேலி கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
