/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டாறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள்... ஆழப்படுத்தப்படுமா? பூண்டி மலையில் வீணாகும் நீரை சேமிக்கலாம்
/
காட்டாறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள்... ஆழப்படுத்தப்படுமா? பூண்டி மலையில் வீணாகும் நீரை சேமிக்கலாம்
காட்டாறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள்... ஆழப்படுத்தப்படுமா? பூண்டி மலையில் வீணாகும் நீரை சேமிக்கலாம்
காட்டாறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள்... ஆழப்படுத்தப்படுமா? பூண்டி மலையில் வீணாகும் நீரை சேமிக்கலாம்
ADDED : ஏப் 29, 2024 11:32 PM

திருவள்ளூர் : பூண்டி மலையில் உள்ள காட்டாறுகளின் குறுக்கே வனத்துறை சார்பில் கட்டப்பட்டு உள்ள தடுப்பணைகளை ஆழப்படுத்தினால், மழைக்காலத்தில் வழிந்தோடும் தண்ணீரை சேமிக்க முடியும். இதன் வாயிலாக, விவசாய பயன்பாட்டிற்கும், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் மழைநீரை கொண்டு வரலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, ஆந்திர - தமிழக எல்லையில் மலை பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. வனத்துறை பராமரிப்பில், காப்புக் காடாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இங்கு, மான், நரி, ஓநாய், குரங்கு போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. வன விலங்குகள் குடிநீர் அருந்துவதற்காக, வனத்துறை சார்பில், மலைகளில் பெய்யும் மழைநீர் வடிந்தோடும் ஓடைகளின் குறுக்கே, தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.
வறண்ட தடுப்பணைகள்
பூண்டி ஒன்றியம், பிளேஸ்பாளையம், அல்லிகுழி, திம்மபூபாலபுரம், பப்பிரெட்டிகண்டிகை, கூனிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த தடுப்பணைகள் அனைத்தும் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும், உயரம் குறைவாக கட்டப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.
இதனால், கன மழை பெய்தாலும், சிறிய அளவிலேயே தண்ணீர் தேங்கி, உபரிநீர் வழிந்தோடி வீணாகி வருகிறது.
எனவே, உயரம் குறைவாக உள்ள இந்த தடுப்பணைகளை ஆழப்படுத்தி, ஓடைகளையும் அகலப்படுத்தினால், மழைக் காலத்தில் கூடுதல் தண்ணீர் சேகரிக்க முடியும்.
இதனால், தடுப்பணைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களின் ஏரி, குளங்கள் நிரம்பும். விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படாது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பூண்டி மலை பகுதி ஆந்திர மாநிலம் கனகம்மாசத்திரத்தில் துவங்கி, சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம், வழியாக நாகலாபுரம் வரை பரந்து, விரிந்து உள்ளது. மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து உள்ளன. இவற்றை தவிர, ஆங்காங்கே சிறு, சிறு குன்றுகளும் உள்ளன.
மழைக் காலத்தில் பெய்யும் கனமழையால், மலைகளில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தண்ணீர் வரும் வழியில், தாழ்வான பகுதிகள், பள்ளங்களில் தேங்கி வீணாகிறது. இந்த ஓடைகளை முறைப்படுத்தி, துார்வாரி, அகலப்படுத்தி, தடுப்பணைகளை கட்டி சேகரிக்கலாம்.
இதை வனத்துறையும், பொதுப்பணி துறை - நீராதாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, பூண்டி வனப்பகுதிகளை ஆய்வு செய்து, தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் கூறியதாவது:
பூண்டி காப்புக் காடு பகுதியில், வன விலங்குகள் தண்ணீர் அருந்த தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அணையில் சேகரமாகும் தண்ணீரை, அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், விவசாய தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு அனுமதியளித்து, நிதி ஒதுக்கீடு செய்தால் தான், தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கரையை உயர்த்த இயலும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

