/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
* 3,000 பேர் வீடு, மனைக்கான வரி செலுத்தாதது...அம்பலம்!:* 10 ஆண்டுகளாக ஏமாற்றி வருவோர் மீது நடவடிக்கை
/
* 3,000 பேர் வீடு, மனைக்கான வரி செலுத்தாதது...அம்பலம்!:* 10 ஆண்டுகளாக ஏமாற்றி வருவோர் மீது நடவடிக்கை
* 3,000 பேர் வீடு, மனைக்கான வரி செலுத்தாதது...அம்பலம்!:* 10 ஆண்டுகளாக ஏமாற்றி வருவோர் மீது நடவடிக்கை
* 3,000 பேர் வீடு, மனைக்கான வரி செலுத்தாதது...அம்பலம்!:* 10 ஆண்டுகளாக ஏமாற்றி வருவோர் மீது நடவடிக்கை
ADDED : டிச 26, 2024 09:36 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 3,000 பேர் வீட்டு வரி, காலி மனைகளுக்கான வரியை செலுத்தாதது கணக்கெடுக்கும் பணிகளின்போது அம்பலமாகி உள்ளது. 10 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், முதற்கட்டமாக, 375 வீடுகளுக்கு புதியதாக வரி நிர்ணயம் செய்ததின் வாயிலாக நகராட்சிக்கு, 16 லட்சம் ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 13,718 பேர் சொத்து வரியும், 2,613 பேர் காலிமனை வரியும், 1,230 பேர் தொழில் வரியும், 1,590 பேர் குடிநீர் வரியும், நகராட்சியின் கடைகளுக்கு, 156 பேர் வாடகையும், 13,715 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சர்வீஸ் கட்டணம் என, ஆண்டுக்கு, 6.35 கோடி ரூபாய் நகராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது.
இந்த நிதியின் வாயிலாக நகராட்சி மக்களின் குடிநீர், கால்வாய், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நகராட்சி நிர்வாகம் செய்து வருகின்றன.
இந்நிலையில், நகராட்சியில் புதிய வீடுகள் மற்றும் கடைகள் கட்டுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பலர் வீடு, கடைகள் கட்டி, 10 ஆண்டுகள் ஆகியும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர்.
இதனால், நகராட்சிக்கு பெருமளவு வருவாய் இழப்பீடு ஏற்படுவதுடன் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதிலும் நிதி பற்றாக்குறையால் சிக்கல் ஏற்படுகிறது.
குறிப்பாக, புதுவீடுகள், கடைகள் மற்றும் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்து வசூலிக்காததால் ஆண்டுக்கு குறைந்தபட்சம், 1 - 3 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், ஒரு மாதமாக, 21 வார்டுகளில் புதியதாக வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் கட்டியவர்கள் மற்றும் வரி செலுத்தாத வீடுகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதில், 3,000 வீடுகளுக்கு மேல் சொத்துவரி இதுவரை செலுத்தாமல் உள்ளனர். அதே போல் காலிமனை வரியும் செலுத்தாமல் உள்ளது என கணக்கெடுப்பில் அம்பலம் ஆகியுள்ளன.
தனிக்குழு அமைப்பு
இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
நகராட்சியில், 21 வார்டுகளில் பெரும்பாலானோர் நகராட்சி அனுமதி பெறாமல் புதிய வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி வருகின்றனர். மேலும், பல ஆண்டுகளாக, புது வீடுகள் கட்டியவர்கள் மற்றும் காலிமனை வைத்துள்ளனர்கள் நகராட்சிக்கு வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர்.
புது வீடுகள், காலிமனைகள் குறித்து கணக்கெடுத்து, வரி நிர்ணயம் செய்வதற்கு, வருவாய் ஆய்வாளர் நரசிம்மன் தலைமையில், ஐந்து பேர் கொண்ட தனிக்குழு அமைத்து, ஒன்றரை மாதமாக அனைத்து வார்டுகளுக்கும் சென்று வரி கட்டாத வீடுகள், காலிமனைகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.
இதுவரை, 375 வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளதை கண்பிடித்து புதியதாக வரி, குடிநீர் கட்டணம் நிர்ணயம் செய்து வசூலித்துள்ளோம். இதனால், 16 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளன.
நகராட்சியில் மொத்தம், 3,000 வீடுகள் வரி செலுத்தாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளன. தொடர்ந்து தனிக்குழுவினர் புதுவீடுகள், காலிமனைகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகிறோம். மேலும் குப்பைகள் வண்டிகள் வரி செலுத்தாத வீடுகள் முன்பு நிறுத்தவும், நீதிமன்றத்தின் வாயிலாக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.