/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி தரும் நபர்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு போலீசார் நியமனம்
/
தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி தரும் நபர்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு போலீசார் நியமனம்
தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி தரும் நபர்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு போலீசார் நியமனம்
தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி தரும் நபர்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு போலீசார் நியமனம்
ADDED : ஆக 19, 2024 11:01 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி போலீஸ் சப் - டிவிஷனில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வெளி நபர்களை கண்காணித்து, அறிக்கை அனுப்ப சிறப்பு போலீஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய் கண்டிகை சிப்காட் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
மேலும் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் புதிதாக மாநெல்லுார் சிப்காட் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி தாலுகாவில், தொழிற்சாலைகள் நடத்த தொழில்முனைவோர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதன் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்.
தொழிற்சாலைகள், நிர்வாக ரீதியாக அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை கடந்து, வெளியில் இருந்து வரும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
அரசியல்வாதிகள், உள்ளூர் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ரவுடிகள் என நான்கு பக்கமும் வரும் நெருக்கடிகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கான்ட்ராக்ட், மேன் பவர், டிரான்ஸ்போர்ட், சப்ளை, பழைய பொருட்களை கேட்டு தொல்லை கொடுப்பது, தர மறுத்தால் உள்ளூர் மக்களுக்கு வேலை தரவில்லை, சுற்றுச்சூழல் பாதிப்பு எனக் கூறி, தொழிற்சாலைகள் முன் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
குறிப்பாக, புதிதாக தொழிற்சாலை துவங்கும் நிர்வாகத்தினரிடம் போட்டி போட்டுக் கொண்டு, தொல்லை கொடுக்கும் நபர்களால், ஏன் தொழில் துவங்கினோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த தொல்லைகளை கட்டுப்படுத்தி, நிம்மதியாக தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தொழிற்சாலைகளை கண்காணித்து, நெருக்கடி தரும் வெளி நபர்களை கண்டறிந்து தகவல் தெரிவிக்க, கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-- டிவிஷனில், சிறப்பு பிரிவு போலீசார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டியை தலைமை இடமாக கொண்டு, சேகரிக்கும் தகவலை, வடக்கு மண்டல ஐ.ஜி., மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் சிறப்பு பிரிவு போலீசார் சமர்ப்பிக்க வேண்டும். அவர் அளிக்கும் தகவல் அடிப்படையில், நெருக்கடி தரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

